விமானத்தை இயக்க முடியாது.. காக்பிட் அறையை மூடிய இண்டிகோ பைலட்! பரிதவித்த பெங்களூர் பயணிகள்
மும்பை: புனேவில் இருந்து பெங்களூர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தை, பணி நேரம் முடிந்ததாக கூறி இயக்க மறுத்த விமானி, பயணிகளின் கேள்விக்கு சரியாக பதிலளிக்காமல் காக்பிட் அறையை மூடிக்கொண்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து பெங்களூருக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தை, விமானி இயக்க மறுத்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தனக்கு பணி நேரம் முடிந்துவிட்டதால் இனிமேல் விமானத்தை இயக்க முடியாது என்று விமானி கூறிவிட்டு, காக்பிட் அறையை மூடிக்கொண்டதால், விமானத்திற்குள் ஏறிய பிறகு பயணிகள் பரிதவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. விமானத்திற்குள் பயணிகள் அனைவரும் ஏறிய பிறகு விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனதால், என்ன ஆனது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்த பயணிகள், இது குறித்து விமான பணிப்பெண்ணுடனும், விமானியிடம் கேட்டிருக்கிறார்கள். காக்பிட் அறையில் இருந்து வெளியே வந்து விளக்கம் அளிக்குமாறு விமானியிடம் பயணிகள் கேட்கும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
ஆனால், இதற்கு முறையான பதிலளிக்காத விமானி.. காக்பிட் அறையை டமார் என்று மூடிக்கொண்டார். விமானியின் செயலைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் விரக்தியுடன் விமானத்திற்குள் நிற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பயணி ஒருவர், புனேவில் இருந்து பெங்களூருக்கு செல்லும் 6E என்ற இண்டிகோ விமானம் 5 மணி நேரம் தாமதம் ஆனது.
தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறிய விமானி விமானத்தை இயக்க மறுத்துவிட்டார். பயணிகள் ரெஃப்ரஷ் ஆக கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. இழப்பீடு எதுவும் இல்லை. இண்டிகோ நிறுவனம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று விமான போக்குவரத்து ஆணையகரகத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
கடந்த 1 ஆம் தேதி அந்த பயணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், “கடந்த மாதம் 24 ஆம் தேதி பெங்களூருக்கு புறப்பட இருந்த விமானம் 6E 361- விமான பணி நேர கட்டுபாடுகளால் சேவை குறைபாடு எற்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து உரிய தகவல் தெரிவிக்கப்பட்டது. பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications