ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்.. விசாரிக்க சென்ற காவல் துறையை அதிரவைத்த டிவிஸ்ட்
மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் களத்தால் அந்த மாநில அரசியல் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் பாலிவுட் உச்ச நடிகர்களுக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல்கள் சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சல்மான்கானுக்கு பல கொலை மிரட்டல்கள் சென்ற நிலையில், தற்போது ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என நினைத்த நிலையில், அதில் திடீர் டிவிஸ்ட் விழுந்துள்ளது.

மகாராஷ்ரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வருகிற நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மாதம் நடந்த இந்த அரசியல் கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்தக் கொலைக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் டீம் பொறுப்பேற்றது. பாபா சித்திக் கொலை மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமா வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாபா சித்திக் பாலிவுட் பிரபலங்கள் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
முக்கியமாக நடிகர் சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். சல்மானுடன் நெருக்கமாக உள்ள யாராக இருந்தாலும், இதே நிலைதான் என லாரன்ஸ் பிஷ்னோய் டீம் பகீர் வாக்கு மூலம் கொடுத்திருந்தனர். பாபா சித்திக் கொலையை தொடர்ந்து சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அதேபோல பாபா சித்திக், ஷாருக்கானுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். சல்மான்கானும் ஷாருகானும் மனஸ்தாபத்தில் சிறிது காலம் பேசாமல் இருந்தனர். அவர்கள் இருவரையும் இணைத்து வைத்தவர் பாபா சித்திக் தான். தற்போது சல்மான்கானிடம் பணம் கேட்டு மிரட்டியதை போல, ஷாருக்கானிடமும் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மர்மநபர் ஒருவர் ஷாருக்கானுக்கு தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது.
அதில் ஷாருக்கானுக்கு சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பந்த்ரா காவல்துறை, மும்பை சைபர் க்ரைம் போலீஸ், சத்தீஸ்கர் காவல்துறை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் ராய்பூரைச் சேர்ந்த முகமது ஃபைசன்கான் என்பவரின் செல்போனில் இருந்துதான் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
மும்பை காவல்துறை ஃபைசன்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் திடீரென்று வழக்கில் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ஃபைசன்கான் ஒரு வழக்கறிஞர் ஆவார். நவம்பர் 5 ஆம் தேதி ஷாருக்கானுக்கு அவரின் செல்போனில் இருந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஆனால் அவர் நவம்பர் 2 ஆம் தேதியே தன்னுடைய செல்போனை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். என்றனர். ராய்பூர் சென்ற மும்பை காவல்துறை ஃபைசன்கானிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது ஃபைசன்கான், என் செல்போன் தொலைந்துவிட்டது. ஷாருக்கானுக்கு யார் மிரட்டல் விடுத்தார்கள் என தெரியவில்லை. என்னுடைய செல்போனில் உள்ள சிம்கார்டும், வாட்ஸ் அப் எண்ணும் வேறு வேறு. எனவே காவல்துறை இரண்டு எண்களையும் முறையாக விசாரிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications