கதறிய பெற்றோர்.. துனிஷாவின் உடலுக்கு இறுதி சடங்கு.. ஷீசன் முகமது கானின் தாய், சகோதரி பங்கேற்பு
மும்பை: பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகையான துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று மும்பையில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இதில் தற்கொலைக்கு காரணம் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ள ஷீசன் முகமது கானின் தாய் மற்றும் சகோதரி பங்கேற்றுள்ளனர்.
சண்டிகரை சேர்ந்த துனிஷா சர்மா சிறு வயதிலிருந்தே பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகிவிட்டார். குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய இவருக்கு தற்போது தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் சமீப நாட்களாக அலி பாபா தஸ்தான் இ காபூல் எனும் தொடரில் நடித்து வந்திருந்தார். இந்த தொடரின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்திருக்கிறது.
இவ்வாறு இருக்கையில் கடந்த 24ம் தேதி படப்பிடிப்பு தளத்தில் உள்ள அவரது மேக்கப் ரூமில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளார். உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புகார்
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது முதலில் துனிஷாவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். புகாரில், "தனது மகளும் அவளுடன் சேர்ந்து நடித்த ஷீசன் முகமது கானும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அவர் எனது மகளிடமிருந்து பிரேக் அப் செய்துவிட்டார். அப்போதிலிருந்து அவள் மிகவும் வித்தியாசமாக நடந்துகொண்டாள். தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளானாள். இதன் முடிவாகதான் தற்கொலை செய்துகொண்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

கைது
மேலும் தன்னுடைய மகளை ஷீசன் முகமது கான் கடந்த 4-5 மாதங்களாக பயன்படுத்தியுள்ளார் என்றும் குற்றம்சாட்டினார். புகாரையடுத்து ஷீசன் முகமது கான் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையில் துனிஷா கடந்த 2018ம் ஆண்டே தீவிரமான மன சோர்வுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. அதேபோல துனிஷா கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால்தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் பிரேதப் பரிசோதனையில் இது உறுதி செய்யப்படவில்லை. ஆனால் துனிஷாவும் ஷீசன் முகமது கானும் காதலித்து வந்திருந்தது மட்டும் உண்மை என்று தெரிய வந்தது.

அரசியல்
இதனையடுத்து இந்த விவகாத்தை அரசியல் கட்சியினர் கையில் எடுத்தனர். அதாவது மகாராஷ்டிராவின் ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ராம் கதாம், லவ் ஜிகாத் காரணமாகதான் துனிஷா தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றம் சாடினார். இதே கருத்தை பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜனும் கூறினார். அவர் கூறியதாவது, "இந்த விவகாரம் லவ் ஜிகாத்துடன் தொடர்புடையது. இதனை காவல்துறையினர் மிகச்சரியாக விசாரித்து வருகின்றனர். மட்டுமல்லாது லவ் ஜிகாத் விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வர ஆலோசித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இறுதி சடங்கு
இந்நிலையில் பிரேதப் பரிசோதனை முடிந்து துனிஷாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. மும்பை மீரா ரோடு தகன மைதானத்தில் நடைபெற்ற இந்த சடங்கில் துனிஷாவின் தாய் வனிதா துக்கத்தில் பீறிட்டு அழுதார். மேலும் சக நடிகர்களான கன்வர் தில்லான், ரீம் ஷேக், அஷ்னூர் கவுர், அவ்னீத் கவுர், சித்தார்த் நிகம், அபிஷேக் நிகம், ஷிவின் நரங், விஷால் ஜெத்வா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அதேபோல துனிஷா தற்கொலைக்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்ட ஷீசன் முகமது கானின் தாய் மற்றும் சகோதரியும் இதில் பங்கேற்றனர். இதனால் அப்பகுதி சற்று பதட்டமாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications