ஸ்டேன் சாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை தர வேண்டும்.. ஐநா உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் அழுத்தம்
மும்பை: பீமா - கொரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கைதாகி இருக்கும் ஸ்டேன் சாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐநாவின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி கடந்த 2020ம் ஆண்டு என்ஐஏ மூலம் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டார். 2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது.
அதோடு மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு இவர் சேவை செய்து வந்த போது தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் திடீரென கைது செய்யப்பட்டார்.

இவர் என்ஐஏ நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறார். இவர் இரண்டு முறை பெயில் மனு தாக்கல் செய்தும் கூட என்ஐஏ கோர்ட் இவரின் பெயில் மனுவை நிராகரித்துவிட்டது. பர்கின்ஸன் நோய் உட்பட பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளால் இவர் அவதிப்பட்டு வருகிறார்.
இவருக்கு பர்கின்சன் காரணமாக ஏற்பட்ட கை நடுக்கம் காரணமாக தண்ணீர் குடிக்க வசதியாக ஸ்டிரா கேட்டதற்கே என்ஐஏ அமைப்பு இவருக்கு சின்ன ஸ்டிரா வழங்காமல் பல மாதங்கள் இழுத்தடித்தது. இந்த நிலையில் இவரின் உடல்நிலை 2021 மே 28ல் மோசமான நிலையில் ஸ்டேன் சாமியை 15 நாட்கள் தனியார் மருத்துவமனையில் உடனே அனுமதிக்க உத்தரவிட்டது.
மஹாராஷ்டிரா தாலொஜியா சிறையில் தற்போது ஸ்டேன் சாமி அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் இங்குதான் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்டேன் சாமிக்கு போதிய மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டிப்பு காட்டி உள்ளது.
ஸ்டேன் சாமியின் உடல் நலம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசின் தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதேபோல் ஐநாவின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் அறிக்கையாளர் மேரி லாலர் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டேன் சாமிக்கு உடனே சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும்.
அவரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. நேற்று அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்டேன் சாமி கடந்த 9 மாதமாக நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார், என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் அனுப்பி உள்ள நோட்டீஸில் இதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஸ்டேன் சாமிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.தனி மனித உரிமையை காக்கும் வகையில் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கான சிகிச்சையும், அவரின் உயிரை காப்பதற்கான சிகிச்சையும் வழங்க வேண்டும். இது மனித உரிமை தொடர்பானது என்று ஸ்டேன் சாமி குறித்து மனித உரிமைகள் ஆணையம் மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications