நீட் முறைகேடு மட்டுமில்லை.. சர்ச்சையில் மத்திய பணியாளர் தேர்வாணையம்! போலி சர்டிபிகேட் பூஜா கேத்கர்!
மும்பை: நீட், நெட் தேர்வு முறைகேடுகள் நாட்டையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் யுபிஎஸ்சி எனப்படும் மத்தியப் பணியாளர் தேர்வாணையமும் இப்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. யுபிஎஸ்சியின் செயல்பாடுகள் கேள்விக்குறியானதே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மூலம்தான்.. போலி வருமான சான்றிதழ் சர்ச்சையில் சிக்கிய பூஜா கேத்கர் ஐஏஎஸ், தமக்கு பார்வை குறைபாடு, மூளை திறன் குறைபாடு உள்ளதாக போலி சான்றிதழ் பெற முயற்சித்ததும் அம்பலமாகி இருக்கிறது.
நாடு முழுவதும் நீட், நெட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது மத்திய அரசின் மற்றொரு தேர்வு முகமையான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இதுதான் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யக் கூடிய முகமை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு போலி சான்றிதழ்கள் கொடுத்தவர்கள் விவரங்கள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் அம்பலமாகி வருகின்றன. இவை அனைத்துக்கும் காரணமே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பூஜா கேத்கர் எனும் 2013-ம் ஆண்டு பேட்ஜ் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிதான்.

"அப்படி என்ன தவறு செய்தார் என் கட்சிக்காரர் பூஜா கேத்கர்?" என யுபிஎஸ்சி தேர்வு முகமை கேள்விகள் கேட்கலாம். இதற்குதான் ஒன்றா.. இரண்டா சொல்ல.. பூஜா கேத்கரின் முறைகேடுகள் இதோ என ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் வெளியிட்டு அதிர்ச்சியைக் கொடுத்து வருகின்றன.
பூஜா கேத்கர்: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் பூஜா கேத்கர். தாம் ஒரு முழுமையான ஐஏஎஸ் அதிகாரியாக நினைத்துக் கொண்டு புனே ஆட்சியர் அலுவலகத்தில் பூஜா செய்த அலப்பறைகளின் அதிர்ச்சியில் இருந்து அந்த கட்டிடம் இன்னமும் மீளவில்லை. இது தொடர்பான புகார்கள் பதிவாகி ஊடகங்களில் வெளியான போதுதான் பூஜாவின் முறைகேடுகளும் அணிவகுத்தன.
புனே ஆட்சியர் அலுவலகம்: அதாவது புனே ஆட்சியர் அலுவலகத்தில் தனி அறை ஒதுக்க வேண்டும் என ஆர்டர் போட்டிருக்கிறார்; சொந்த ஆடி காரில் சிவப்பு சுழல் விளக்குடன் வலம் வந்துள்ளார்; போலீசாரின் கைது நடவடிக்கைகளில் அத்துமீறி தலையிட்டுள்ளார் என்பதெல்லாம் 'சாதாரண சன்ன' ரகம்தான். இற்குமேல் தான் 'ஸ்பெஷல் ரகங்களே'.
போலி வருமான சான்றிதழ்: பூஜாவின் தந்தை திலீப் கேத்கர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டிருந்தார். அவர் தமது ஆண்டு வருமானம் ரூ43 லட்சம், தமக்கு ரூ40 கோடி சொத்து உள்ளது என குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இடஒதுக்கீட்டின் சலுகையை அனுபவிக்க தமக்கு ரூ8 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம்தான் இருக்கிறது என போலி சான்றிதழ் கொடுத்துள்ளார் பூஜா கேத்கர். இதனை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் ஏற்று அவருக்கு ஓபிசி நான் கிரிமிலேயர் அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறது. இத்துடன் சர்ச்சைகள் ஓயவில்லை.
பொய்யான தகவல்- மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பு: அடுத்ததாக தமக்கு பார்வை குறைபாடு, மூளை திறன் குறைபாடு உள்ளது என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தாராம். இதற்காக சில மருத்துவர்களின் சான்றிதழ்களை விண்ணப்பத்தில் இணைத்திருந்தாராம். ஆனால் இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்த அவரை அழைத்த போது 6 முறை மறுப்பு தெரிவித்திருந்தாராம். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏப்ரல் 2022-ல் முதல் மருத்துவ பரிசோதனை நடந்த போது கொரோனாவை காரணம் காட்டி பூஜா கேத்கர் எஸ்கேப்பாகி இருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சில மருத்துவ பரிசோதனைகளில் மட்டும் பெயரளவுக்கு பங்கேற்றாராம் பூஜா.
போலி சான்றிதழ் முயற்சி: அதேநேரத்தில் போலியாக "மாற்றுத் திறனாளிகளுக்கான" சான்றிதழ் பெறவும் 3-வது முறையாக விண்ணப்பித்திருக்கிறார் பூஜா கேத்கர். 2022-ம் ஆண்டு இந்த போலி சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தார் பூஜா. அவரை பரிசோதித்த மருத்துவர்களோ, உங்களுக்கு அப்படி எந்த பாதிப்புமே இல்லையே.. அதனால் உங்களுக்கு பார்வை குறைபாடு, மூளை திறன் குறைபாடு ஆகியவற்றைக் குறிப்பிட்டு மாற்று திறனாளி சான்றிதழ் வழங்க முடியாது என கையெழுத்திட்டே கொடுத்துவிட்டனர். அதுவும் இப்படி ஒரு போலி சான்றிதழைப் பெற பூஜா கேத்கர் 2-வது முறையாக முயற்சித்தும் இருக்கிறாராம்.
எப்படி ஐஏஎஸ் ஆனார்?: போலியான வருமான சான்றிதழ் கொடுத்தவர்; போலியான மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்தார்; உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொள்ள மறுத்தவர் என்ற போதும் பூஜா கேக்தருக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்படி ஐஏஎஸ் பதவி கொடுத்தது? எப்படி புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்? மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்-ல் யார் உடந்தையாக இருந்தது? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை எதுவுமே இல்லை என்பதுதான் துயரம்!












Click it and Unblock the Notifications