மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் கொடூர விபத்து.. அடுத்தடுத்து 20 வாகனங்கள் மீது மோதிய லாரி! எப்படி நடந்தது?
மும்பை: மும்பை - புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு சென்றது. சுமார் 20 வாகனங்கள் மீது அடுத்தடுத்து லாரி மோதியதில் ஒரு பெண் பலியானர். 15 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
நாட்டின் மிக முக்கியமான எக்ஸ்பிரஸ்வேயாக மும்பை - புனே உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இரு முக்கியமான கரங்களை இணைக்க கூடிய இந்த சாலையில், வாகன போக்குவரத்து எப்போதும் இருக்கும் என்பதால் 24 மணி நேரமும் பரபரப்பாக இந்த சாலை காட்சியளிக்கும்.

இந்த எக்ஸ்பிரஸ் வே சாலையில், லோனாவாலா - கண்டலா வனப்பகுதி அருகே லாரி ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் திடீரென பிரேக் செயலிழந்தது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற கார்கள் உள்பட மொத்தம் 20 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதனால் வாகனங்கள் சேதமடைந்து சாலையில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
திடீரென நடந்த விபத்தினால் அலறிய வாகன ஓட்டிகள், வாகனத்தில் இருந்து பீதியுடன் இறங்கினர். லாரி மோதிய விபத்தில் வாகன இடிபாடுகளில் சிக்கி 16 பேர் காயமடைந்தனர். எதிர்பாராவிதமாக நடந்த விபத்தினால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்த 16 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்பின்னர் லாரி மோதிய விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மும்பை - புனே நெடுஞ்சாலையில் விபத்து காரணமாக சுமார் 5 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்று நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்களை மாற்று பாதையில் போலீசார் திருப்பி விட்டனர். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் மற்ற 21 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவரின் அடையாளம் தெரியவந்துள்ளது. வாகனத்தை ஓட்டி வந்த பெண் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார். உஸ்மானாபாத்தை சேர்ந்த 35 வயதான அனிதா எகாந்தே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயம் அடைந்தவர்களில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியின் மனைவியும் ஒருவர் ஆவார்.
சுமார் 45 மணி நேரம் கழித்து விபத்தில் சிக்கிய வாகனங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டன. இது குறித்து மும்பை அதிகாரிகள் கூறுகையில், "பிரேக் பெயிலியர் ஆனதால் கண்ட்யெனர் லாரி டிரைவிரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 20 க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு டிரக் சென்றது.
பி.எம்டபிள்யூ, மெர்சிடஸ் போன்ற சொகுசு கார்களும் இதில் அடங்கும். காயம் அடைந்தவர்கள் அனைவரும் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications