மகாராஷ்டிராவில் மிகப்பெரிய காவி அலை.. இமாலய வெற்றியை நோக்கி பாஜக கூட்டணி.. காரணமே இதுதான்!
மும்பை: மகாராஷ்டிராவில் மிகப்பெரிய பாஜக அலை வீசி உள்ளது. அரசியல் வல்லுனர்கள் பலரும் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை நோக்கி பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் சென்று கொண்டு இருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் கடந்த வாரம் ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.

மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.
எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிடுகிறது.
முடிவுகள்: தற்போது வரை வெளியான முடிவுகளில் பாஜக கூட்டணி - பாஜக 125 இடங்கள், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 35, ஷிண்டே சிவசேனா - 55 இடங்களில் முன்னிலை. பாஜக கூட்டணி மொத்தமாக 227 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி - காங்கிரஸ் 22, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - 13 இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா 17இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 57 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மாபெரும் வெற்றி: மகாராஷ்டிராவில் மிகப்பெரிய பாஜக அலை வீசி உள்ளது. அரசியல் வல்லுனர்கள் பலரும் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை நோக்கி பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் சென்று கொண்டு இருக்கிறது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் 30 தொகுதிகளை இங்கே வென்றது காங்கிரஸ் கூட்டணி. இப்போது பாஜக மட்டுமே காங்கிரஸ் கூட்டணியின் அத்தனை கட்சிகளை விட அதிக இடத்தில் முன்னிலை வகிக்கிறது. அதாவது மொத்தமாக காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 57 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் தனியாகவே 127 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அங்கே பாஜக வெற்றிக்கு முக்கியமான காரணங்களாக சில விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. இது தொடர்பாக உள்ளூர் பாஜக தலைவர்கள் ஒன்இந்தியா தரப்பிடம் கூறியது, லோக்சபா தேர்தலின்போது இட ஒதுக்கீட்டை பாஜக நீக்கிவிடும் என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்ததும், அரசியல் சாசனத்தை பாஜக திருத்திவிடும் என்று பிரச்சாரம் செய்ததும்தான் காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு காரணம்.
ஆனால் காங்கிரஸ் கூட்டணியின் அந்த பிரச்சனை பொய் என்று மக்களுக்கு தெரிந்துவிட்டது ஒரு முக்கிய காரணம். அதேபோல்.. இது சட்டசபை தேர்தல் என்பதால் தேசிய ஆட்சி தாண்டி மாநில ஆட்சியே கருத்தில் கொள்ளப்படும். அதனால் பாஜக கூட்டணிக்குதான் ஓட்டு போடுவோம் என்று நம்மிடம் மக்கள் பலர் தெரிவித்தனர். அதுவும் பாஜக கூட்டணிக்கு ஒரு காரணம்.
சிவசேனாவை மற்றும் என்சிபியை உடைத்த கோபத்தை லோக்சபா தேர்தலில் மக்கள் காட்டிவிட்டனர். எனவே அப்போது லோக்சபா தேர்தலில் பாஜக அடி வாங்கியது. இப்போது கோபம் தணிந்துள்ளதாக தெரிகிறது
அங்கே மகளிருக்கு 1500 ரூபாய் மாதம் வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ரூ.3000 கொடுக்கும் வாக்குறுதி தந்ததை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இது மட்டுமல்லாது, மாநில பிரச்சினைகளை காங்கிரஸ் அதிகம் பேசவில்லை. சட்டசபை தேர்தலிலும் தேசிய பிரச்சினையை பேசியது. ஆனால் மோடி மாநில அளவிலான விஷயங்களை அதிகம் பிரச்சாரம் செய்தார்.
ஆர்எஸ்எஸ் லோக்சபா தேர்தலின்போது மோடிக்கு பாடம் கற்பிக்க விரும்பியது. இப்போது ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது என்பதும் தேர்தல் நேரத்தில் காங்கிரசுக்கு எதிராக திரும்பியது குறிப்பிடத்தக்கது. அதோடு மோடி அலையை தாண்டி.. உள்ளூர் அளவில் ஷிண்டே - தேவேந்திர பட்நாவிஸ் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். முக்கியமாக தேவேந்திர பட்நாவிஸ் கிரேஸ் இன்னும் அங்கு குறையவில்லை என்பது முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications