கர்நாடகா முன்னாள் அமைச்சர் தன்வீர் சேட் மீது கொலைவெறித் தாக்குதல்
மைசூரு: கர்நாடகத்தில் முன்னாள் அமைச்சர் தன்வீர் சேட் மீது கத்தியால் 20 வயது இளைஞர் ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சராக இருந்தவர் தன்வீர் சேட் (52). இவர் மைசூருவில் உள்ள பன்னி மண்டபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இரவு 11.45 மணிக்கு அவரை 20 வயது இளைஞர் ஒருவர் நெருங்கினார்.

தொண்டர் என நினைத்த நிலையில் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்வீர் சேட் மீது குத்தினார். சற்றும் எதிர்பாராத நிலையில் தன்வீருக்கு கழுத்து மீது படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கத்தியால் குத்திய அந்த நபரை தன்வீரின் ஆதரவாளர்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பெயர் பஃர்ஹான் என்றும் அவர் உதயகிரியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து தன்வீருக்கு கத்திக்குத்து என கேள்விப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு ஏராளமானோர் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தன்வீரை கத்தியால் குத்தியது ஏன் என்பது குறித்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications