'இது சாலையில் ஓட லாயக்கு இல்லை'.. அரசு பஸ்ஸை ஆர்டிஓவிடம் ஒப்படைத்த ஓட்டுநர்.. வீடியோ பாருங்க
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பேருந்தை, சாலையில் ஓட லாயக்கு இல்லை என்று கூறி, அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தை ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான பொது போக்குவரத்து வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான அரசின் சொந்த வாகனங்களையும் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
தமிழக போக்குவரத்துக் கழகங்களின் கீழ் உள்ள 20,926 பேருந்துகளில் சுமார் 1,500 பேருந்துகள் ஓடுவதற்கு லாயக்கு இல்லாத நிலையில் இருந்தன. இதனை அடுத்து 2,213 பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பழைய அரசு பேருந்துகள் பல ஓட்டை உடைசலாக இருக்கின்றன. இந்த பேருந்துகளில் பல இப்போது இலவச பேருந்துகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சில பேருந்துகள் இரு நகரங்களிடையே ஓடும் பேருந்துகளாகவும் சென்று வருகின்றன.
அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் TN74N1841 என்ற அரசு பேருந்து ஓடிக்கொண்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சரியாக பிரேக் பிடிக்காமல் இருந்துள்ளதாம். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி இந்த அரசு பேருந்து சென்று வந்து கொண்டிருந்தது.
அடிக்கடி பிரேக் பிடிக்காத காரணத்தால் ஆத்திரம் அடைந்த டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகயோர், பேருந்தில் பிரேக் சரியாக பிடிக்கவில்லை என்று கூறி ஆர்டிஒ அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேக் இல்லாத அரசு பேருந்தை RTO அலுவலகத்தில் ஒப்படைத்த. அரசு ஓட்டுநர்
— velmurugan (@velmurugantheni) July 18, 2023
கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் TN74N1841 இந்த அரசு பேருந்து இரண்டு மூன்று நாட்களாக சரியாக பிரேக் இல்லாமல் 👇 இருந்ததது. #setc #bus #kanyakumari pic.twitter.com/Y5JCAI0fB1
இதுபற்றி டிரைவரும் நடத்துனரும் கூறும் போது, நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பேருந்து அடிக்கடி பழுதாகி நின்றது. பிரேக் பிடிக்கவில்லை. சாலையில் ஓடவே தகுதியற்றதாக இருந்தது. இதுபற்றி பல முறையும் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டோம் என்றார்கள்.
மக்கள் உயிரைக் காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை கருதலாம் என்று சமூக வலைதளங்களில் சிலர் டிரைவர் மற்றும் நடத்துனரின் செயலை பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் ஓட்டுநர் அரசுப் பேருந்தை ஆர் டி ஓ அலுவலகத்தில் ஒப்படைத்தது தவறு அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications