மனதை கரைத்த அமைச்சரின் பேச்சு.. சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர்.. அதிமுகவிற்கு திடீர் ஜம்ப்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் பி.சந்திரன், அமைச்சர் தங்கமணி முன்னிலையில் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தார். ஏற்கனவே புதுச்சேரி திருநாள்ளாறு தொகுதி அமமுக வேட்பாளர் ஒருவர் அண்மையில் பாஜகவிற்கு தாவியிருந்த நிலையில் மீண்டும் ஒருவர் கட்சி மாறியிருப்பது அமமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்(எஸ்.டி) தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.சந்திரன், திமுக சார்பில் கே.பொன்னுசாமி, அமமுக சார்பில் பி.சந்திரன், ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதுதவிர சீட் கிடைக்காததால் விரக்தி அடைந்த தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான சி.சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்
இதனால் சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுகவின் வாக்குகள் பல வகையாக பிரியும் நிலை உள்ளது. ஒரு பக்கம் அமமுக, மறுபக்கம் சுயேட்சையாக எம்எல்ஏ போட்டி என இருப்பதால் திமுக இங்கு எளிதில் வெல்ல வாய்ப்பு உருவானது.

அமைச்சர் பேச்சு
இந்நிலையில் சேந்தமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.தங்கமணி, கடந்த தேர்தலில் சந்திரசேகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த பி.சந்திரன் அமமுகவில் இணைந்து விட்டார். அவர் அதிமுகவில் இருந்திருந்தால் இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.

அமமுக வேட்பாளர்
இதற்கிடையே கூட்டணி கட்சியான தேமுதிகவினருடன் பி.சந்திரன் பிரசாரம் செய்து வந்தார். பரமத்திவேலூரில் டிடிவி.தினகரன் பங்கேற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டு அமமுகவிற்கு வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாளே உள்ள நிலையில் திடீரென அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

தங்கமணி முன்னிலையில்
அமமுகவின் நாமக்கல் மாவட்ட துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த பி சந்திரன், திடீரென திருச்செங்கோட்டில் மின் துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஏற்கெனவே திருச்செங்கோட்டில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹேமலதா என்பவரும் போட்டியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

சேந்தமங்கலம் நிலவரம்
சேந்தமங்கலம் தொகுதியில் அமமுக போட்டியில் இருந்து விலகிக் கொண்டதால், தற்போது அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அக்கட்சியினர் உற்சாகமாக உள்ளனர். தற்போதைய நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் தந்திடிவியின் கருத்துக்கணிப்பின் படி, நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சேந்தமங்கலத்தில் திமுக கூட்டணி வெல்லும் என்றும் அதிமுக குமாரபாளையத்தில் வெல்லும் என்றும், ராசிபுரத்தில் கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications