மன்னிச்சிடுங்க.. தொகுதி மாறி மாறி வர்றதால குழம்பிட்டேன்: வேட்பாளர் பெயரை மாற்றி கூறி சமாளித்த கௌதமி!
நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை கௌதமி, வேட்பாளர் பெயரை மாற்றிச் சொல்லி, கூட்டத்தில் இருந்து கூச்சல் வந்த பிறகு சமாளித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியான வாளரைகேட்டில் நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக நட்சத்திர பேச்சாளர் கௌதமி வருகை தந்தார். அண்மையில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கௌதமி இந்த முறை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்தவகையில், நாமக்கல் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த கௌதமி, நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் தங்கமணி உடன் ஒரே வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரச்சார வாகனத்தில் பேசத் துவங்கிய நடிகை கௌதமி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரின் பெயருக்கு பதிலாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பெயரை கூறி வாக்கு கேட்டார். அதை கேட்டு ஷாக்கான அதிமுக தொண்டர்கள் கூச்சலிட்டனர். அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி உடனே இதனை சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கௌதமி, தலையைச் சொறிந்தபடி, "மன்னிக்கணும். காலையிலிருந்து பல்வேறு தொகுதிகளில் மாறி மாறி பிரச்சாரம் செய்து வருவதால் குழப்பம் அடைந்து விட்டேன். இது எனது கவனத்துக்கு வரவில்லை" எனக் கூறி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்து நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கு வாக்களிக்குமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.
மேலும், என்னை பொறுத்தவரை அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும், திமுக ஆட்சியின் ஊழல்களை மனதில் வைத்து ஒற்றை விரலால் ஓங்கி அடித்து இரட்டை இலைக்கு வாக்கு செலுத்துங்கள் என பிரச்சாரம் மேற்கொண்டார் கௌதமி.












Click it and Unblock the Notifications