நாமக்கல்லில் சொத்து வரி.. ராசிபுரம் நகராட்சி செய்த சூப்பரான வேலை பாருங்க.. ஊர் முழுக்க இதான் பேச்சு
நாமக்கல்: உரிய காலத்திற்குள் சொத்துவரியை செலுத்த வேண்டும் என்று மாநகராட்சிகள் அழைப்பு விடுவது இயல்பான விஷயம் என்றாலும், நாமக்கல் மாவட்டத்தில் புதுமையான விஷயம் நடந்துள்ளது.. இது தொடர்பான செய்திகள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளை பொறுத்தவரை, முக்கிய வருவாய் மூலமாக இருப்பதே சொத்து வரிகள்தான்.. இதுபோன்று கிடைக்கும் வருவாயை வைத்துதான், பொதுமக்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள், சாலைகளை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற மிக மிக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவேதான், சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.. முக்கியமாக, அரையாண்டு துவங்கும் முதல் 30 நாட்களில், சொத்துவரி செலுத்துவோருக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது..
உரிமையாளர்கள்: ஆனால், சொத்து வரியை செலுத்தாவிட்டால், அந்த உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரியை செலுத்த வேண்டிவரும்.. முறையாக சொத்துவரியை செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ5 ஆயிரம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதற்கு பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு, 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, சொத்து வரியை வசூலிக்க, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.. குறிப்பாக, ராசிபுரம் நகராட்சியில், வரியினங்களை வசூலிப்பதில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒவ்வொன்றும், மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துவிடும்.
சலுகைகள்: குறிப்பாக, குறிப்பிட்ட நாட்களில் கட்டணம் செலுத்தினால் தள்ளுபடி வழங்குவது என்பது உள்பட பல்வேறு வகையான நடவடிக்கையையும் கையில் எடுத்துள்ளனர்.. அதேபோல, ஆட்டோ மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இதைத்தவிர, மாநகராட்சி ஊழியர்களே, நேரடியாக கடைகளுக்கு சென்று சொத்து வரியை நினைவூட்டியும் வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், அடுத்த முயற்சியாக, ராசிபுரம் பகுதியில் நகராட்சி சார்பாக பேனர்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில், நகராட்சி சார்பில், இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன..
நெஞ்சம் நிமிர்த்துவீர்: அதில், "சொத்துவரி செலுத்துவீர், நகரை சொர்க்கபுரி ஆக்குவீர்", "தொழில்வரி செலுத்துவீர், நகரில் பூம் பொழில்கள் பல உருவாக்குவீர்", "வரியினங்கள் வலிய வந்து வசூலிப்பது அல்ல, தானாக வந்து செலுத்த வேண்டியது", "நகராட்சிக்கு உரிய காலத்தில் வரி செலுத்துவீர், நகரின் நலன் பேணும் நற்குடிமகன் என நெஞ்சம் நிமிர்த்துவீர்" என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, ஆன்லைனில் வரி செலுத்துவது எப்படி என்பது குறித்தும் விளக்கமாக அச்சிடப்பட்டுள்ளது.. இப்படி பேனர் வைத்தபிறகு, ஆன்லைனில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுமை பேனர்: இந்த பேனர்கள்தான், நாமக்கல் மாவட்ட மக்களின் மனங்களை வெகுவாக ஈர்த்து வருவதுடன், இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது. சொத்து வரி செலுத்த, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது புதுமையாகவும் பொதுமக்களால் புதுமையாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications