நாமக்கல்லில் திமுக கூட்டணி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 29,112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் மாதேஸ்வரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்மணியைவிட 29112 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக தனித் தொகுதியாக இருந்த ராசிபுரம் தொகுதி மறுசீரமைப்பின்போது நாமக்கல் என்ற பெயரில் பொதுத் தொகுதியாக மாறியது. இந்த தொகுதியில் பெயர் மட்டுமல்ல, தொகுதிகளுமே மாறி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம் (தனி),சேர்ந்தமங்கலம் (தனி 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், சேலம் மாவட்டத்தின் சங்ககிரி தொகுதியையும் இணைத்து 2009ம் ஆண்டு நாமக்கல் தொகுதி உருவாக்கப்பட்டது.

நாமக்கல்லை பொறுத்தவரை விவசாயம் தான் பிரதான தொழில் ஆகும். விவசாயத்தை தவிர கோழிப்பண்ணை முக்கிய தொழிலாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலை தரும் தொழிலாகவும் உள்ளது. முட்டை மற்றும் கோழி இறைச்சி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் இடமாக நாமக்கல் இருக்கிறது. நாமக்கல் கோழி மற்றும் முட்டைகள் தினசரி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த தொகுதி முன்னதாக ராசிபுரம் தொகுதியாக இருந்தவரை, அதாவது தொடக்க காலத்தில் இங்கு காங்கிரஸ் கட்சி தான் பலமுறை வென்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவராஜன் 1977 முதல் 1991 வரை தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தபடியாக 1996ல் தாமகா சார்பில் கந்தசாமி வெற்றி பெற்றார். 1998 மற்றும் 1999ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரோஜா வெற்றி பெற்றார். 2004ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராணி வெற்றி பெற்றார்.
அதேநேரம் நாமக்கல் தொகுதி உருவான 2009ல் திமுக சார்பில் போட்டியிட்ட காந்தி செல்வன் வெற்றி பெற்றார். 2014ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட பிஆர் சுந்தரம் வெற்றி பெற்றார். 2019ல் திமுக கூட்டணியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ஏகேபி சின்ராஜ் வெற்றி பெற்றார். 2024ல் திமுக சார்பில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். இதில் அதிமுக சார்பில் தமிழ்மணியும், பாஜக சார்பில் கேபி ராமலிங்கமும், நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமொழியும் களமிறங்கி உள்ளனர். இவர்களில் வெல்லப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய போகிறது.
கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை திமுக சார்பில் போட்டியிடும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் மாதேஸ்வரன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடிக்க அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கணிப்புகளின் படிநிலைமை இல்லை... அங்கு கடும் போட்டி நிலவியது. ஆனால் நேரம் செல்ல செல்ல நிலைமை மாறியது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 29112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக கூட்டணி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 462036 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 432924 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். பாஜக வேட்பாளர் ராமலிங்கம் 104690 வாக்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்தார். நாதக வேட்பாளர் கனிமொழி 95577 வாக்குகள் பெற்று 4ம் இடத்தை பிடித்தார்.












Click it and Unblock the Notifications