200 ஆடுகள்.. 1800 கிலோ மட்டன்.. விடிய விடிய நாமக்கல் கோயிலில் கறிவிருந்து.. ஆனாலும் ஒரேயொரு கண்டிஷன்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கோயில் விழாவில் 300 ஆடுகளை பலியிட்டு கறி விருந்து பரிமாறப்பட்டது.. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த திருவிழாவில், ஒரு முக்கியமான கண்டிஷன் இருக்கிறதாம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பட்டி கிராமத்தில் பொங்களாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மலையாம்பட்டி கிராமத்தில், ஆலமரத்துக்கு அடியில் இந்த மலையாள தெய்வமான பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் நடைபெறும் இந்த திருவிழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு, நேர்த்திக்கடனுக்காக, ஆடுகளை பலியிடுவது வழக்கம்.

சிறப்பு திருவிழா: 100 ஆண்டுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த சமபந்தி விருந்தானது, சுற்றுவட்டாரத்திலேயே பிரசித்தி பெற்றதாகும்.. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சமபந்தி கிடா விருந்து படைக்கப்பட்டுகிறது..
திருவிழா ஏற்பாடு முதல் கறிவிருந்துவரை அனைத்து வேலைகளையும் ஆண்களே இழுத்துப்போட்டுக்கொண்டுசெய்வார்கள்.. கோயிலுக்கு சொந்தமான பொருள்களைக்கூட பெண்கள் தொட அனுமதிப்பதில்லையாம். அதுமட்டுமல்ல, கோயில் இருக்கும் பகுதிகளில்கூட பெண்களை அனுமதிப்பதில்லையாம். இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
அபயக்குரல்: அதாவது, 200 வருஷத்துக்கு முன்பு கெடமலையில், பொங்களாயி என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, அடைமழை பெய்திருக்கிறது. அந்த நேரம் பிரசவ வலியும் வந்துள்ளது. ஆனால், குடும்பத்தினர் யாருமே உடனில்லாததால், அபயக்குரல் எழுப்பியிருக்கிறார். இவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால், வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் உதவிவில்லையாம். இறுதியில், அங்குள்ள அரச மரத்தடியிலேயே விழுந்துவிட்டார்.
இறுதியில் 2 ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் அந்த குழந்தைகளுமே இறந்துவிட்டன.. தனக்கு யாருமே உதவி செய்யாததால்தான், 2 குழந்தைகளும் இறந்துவிட்டதாக நினைத்து பொங்களாயி சாபம் விட்டாராம். குழந்தை பாக்கியம் இல்லாமலும், பசி பட்டினியாலும் தவிக்க வேண்டும் என்று சாபம் விட்டு மலை மேல ஏறி சென்றுவிட்டாராம்.. அதற்கு பிறகு நிறைய பேருக்கு அந்த கிராமத்தில் குழந்தை பிறக்காமலேயே இருந்திருக்கின்றன.
கொல்லி மலை: கொல்லிமலையில் இருந்து கெடமலைக்குப் போன மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி, மலையாம்பட்டிக்கு வந்தபோதுதான், பொங்களாயி விட்டு சென்ற சாபம் பற்றி ஊர் மக்களுக்கு சொல்லியிருக்கிறார்.. அந்த பெண்ணை அம்மனாக நினைத்து கும்பிட்டால் எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஆனா, இந்த பூஜையில பெண்கள் யாரும் கலந்துக்கக்கூடாது. ஆண்களே எல்லாத்தையும் செய்யணும் என்று சொல்லிவிட்டு சென்றாராம். அந்த பாட்டி சொன்னபடியே செய்தபிறகுதான், அந்த ஊர்ல குழந்தை சத்தமே கேட்டதாம்.
அப்போது முதல் ஆடி மாதம் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பொங்களாயி அம்மனுக்கு இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜை செய்து, ஒரு பெண் ஆட்டை பலி கொடுத்தனர்.
கறிவிருந்து: பின்னர், போதமலையை சேர்ந்த மலையாள பூசாரி நள்ளிரவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தார். இதையடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 200க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாக்களை பலியிட்டு, 1,800 கிலோ ஆட்டு இறைச்சியை சுடச்சுட சமைத்து, சமபந்தி கறி விருந்து படைக்கப்பட்டது. காரணம், சாதி பாகுபாடு காரணமாகவே பொங்களாயி இறந்தார் என்பதால், எல்லா சாதியினரும் இந்த விருந்தில் வருடா வருடம் பங்கேற்று வருகிறார்கள்..
நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்-வேறு மாவட்டங்களில் இருந்து, 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவிழாவில் கலந்து கொள்வோருக்கு ஒரேயொரு கண்டிஷன் இருக்கிறது.. அதாவது, இந்த கறிச்சோற்றை யாரும் வீட்டுக்குகொண்டு போகக்கூடாதாம்..!!












Click it and Unblock the Notifications