கையில் பாட்டில்.. உள்ளே "அது" என்னங்க? மருத்துவமனைக்கு வந்த பெண்ணை பார்த்து.. அலறிய நர்ஸ்கள்
நாமக்கல்: தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது தன்னை கடித்த பாம்பை கையோடு பிடித்து பாட்டிலில் போட்டு மருத்துவமனைக்கு பெண் ஒருவர் கொண்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த பாம்பு கடித்தது என்பதை உறுதி செய்தால் மட்டுமே அதற்கான சரியான மருந்து கொடுக்க முடியும் என்கிற நிலையில் அப்பெண் பாம்பை கையோடு கொண்டு வந்துள்ளார்.இந்த பெண் பாம்போடு வந்ததை பார்த்து அங்கு இருந்த நர்ஸ்கள் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு
உலக நாடுகளில் பாம்பு கடியால் ஏற்படும் மரணங்களில் பாதி இந்தியாவில்தான் நிகழ்கிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில், உலகில் விஷமுள்ள பாம்புகள் அதிகம் உள்ள ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 10-15 பேர் மட்டும்தான் உயிரிழக்கின்றனர். ஆனால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 46,000க்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். அதாவது இந்தியாவில் பாம்பு கடியால் சராசரியாக நாளொன்றுக்கு 126 பேர் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

கட்டுவிரியன்
மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் பாம்பு கடிக்கு மருத்தவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெறும் 20-30 சதவிகிதம்தான். உயிரிழப்பு அதிகரிப்புக்கு இதுவும் ஓர் முக்கிய காரணம் என பலர் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கையில் நாமக்கல் மாவட்டத்தில் பெண் ஒருவர் தன்னை கடித்த பாம்பை பிடித்து அதை பாட்டிலில் அடைத்து எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். நாமக்கல்லின் முள்ளுக்குறிச்சி பகுதியில் தனது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கையில் அவரை கட்டுவிரியன் கடித்துள்ளது.

முதலுதவி
இதனை சற்றும் எதிர்பாராத அவர் அந்த பாம்பை பிடித்து எடுத்து சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவருக்கு உடனடியாக விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டதில் தற்போது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலே குறிப்பிட்டதை போல பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட கிராமத்தினர் மருத்துவமனைக்கு செல்வது குறைவான அளவில்தான் உள்ளது. மேலும், முதலுதவி என்கிற பெயரில் கட்டு கட்டுவது, வாய் வைத்து உறிஞ்சுவது போன்றவற்றை இப்போதும் பலர் செய்து வருகின்றனர்.

மூடநம்பிக்கைகள்
ஆனால் இதனை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். வாய் வைத்து உறிஞ்சுவதன் மூலம் வாயில் ஏதேனும் புண் இருந்தால் விஷம் உடலில் கலந்து அதை செய்யும் நபரும் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அதே போல கூரான பொருள் கொண்டு பாம்பு கடித்த இடத்தை வெட்டுவது போன்றவற்றை செய்வதன் மூலம் அதிக அளவு ரத்த இழப்பு ஏற்பட்டு அந்நபர் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகரித்து விடும். எனவே இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications