சீக்ரெட் மீட்டிங்.. சீனாவை பகைக்க போய் பிரான்ஸை முதுகில் குத்திய அமெரிக்கா.. உடைந்த நட்பு.. மோதல்!
நியூயார்க்: சீனாவிற்கு ஆப்பு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அமெரிக்கா செய்த காரியம் ஒன்று அந்த நாட்டிற்கே எதிராக திரும்பி உள்ளது. பல வருடமாக தனக்கு நண்பனாக இருந்த பிரான்ஸ் நாட்டுடன் அமெரிக்கா மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் நட்பு கிட்டத்தட்ட முறியும் நிலையை அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்கா அணு ஆயுத நீர்முழ்கி கப்பலுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இதனால் ஆஸ்திரேலியா அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலைகளை கொண்ட நாடாக உருவெடுத்து உள்ளது.
அதாவது ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்கா அணு ஆயுத நீர்முழ்கி கப்பல் தொழில்நுட்பத்தை வழங்க முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் மூன்று நாடுகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் பணிகளை மேற்கொள்ளும்.

சீனா
ஆஸ்திரேலியாவிற்கு சீனாவிற்கு இடையே பொருளாதார யுத்தம் தொடங்கி பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக தென் சீன கடல் எல்லையில் இரண்டு நாடுகளும் கடுமையாக மோதி வருகிறது. கொரோனா சமயத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில்தான் சீனாவிற்கு எதிராக ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்கா இந்த அணு ஆயுத தொழில்நுட்ப உதவியை வழங்கி உள்ளது.

என்ன நடந்தது?
இதன் பொருட்டுதான் அமெரிக்க அதிபர் பிடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீன எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவிற்கு சுயமாக அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பலத்தை கொடுக்கும். அமெரிக்காவும், பிரிட்டனும் இந்த தொழில்நுட்பத்தை ஆஸ்திரேலியாவிற்கு வழங்கும். ஆங்கிலம் பேசும் மூன்று நாடுகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன. இதைத்தான் பிரான்ஸ் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக பார்க்கிறது.

பிரான்ஸ் அநீதி
நியாயப்படி பிரான்ஸ்தான் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை வழங்கி இருக்க வேண்டும். 2016ல் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் இடையே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு நீர் மூழ்கி கப்பல்களை கொடுப்பதாக உறுதி அளித்து ஒப்பந்தம் செய்தார். பிரான்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் புகழப்பட்டது. பிரான்ஸ் இந்த ஒப்பந்தம் மேற்கொண்டு 5 வருடம் ஆகி தற்போது பிரான்ஸ் ஒப்பந்தத்திற்கு பதிலாக ஆஸ்திரேலியா அமெரிக்கா பிரிட்டன் இணைந்து Aukus என்ற கூட்டமைப்பை உருவாக்கி புதிய ஒப்பந்தம் போட்டுள்ளது.

சீக்ரெட்
இந்த ஒப்பந்தமே மிகவும் சீக்ரெட்டாக நடந்துள்ளது. வெளியே அறிவிக்காமல் மூன்று நாடுகளும் கூட்டம் நடத்தியது. அதன்பின் கூட்டம் முடிந்து ஒப்பந்தம் போடப்பட்ட பின் அதை பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2021 ஜூன் மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரூனை ஆஸ்திரேலியா பிரதமர் சந்தித்தார். அப்போது கூட இந்த 3 நாட்டு ஒப்பந்தம் குறித்து எதுவும் சொல்லாமல் நேரம் பார்த்து பிரான்ஸை கழட்டிவிட்டுவிட்டு ஆஸ்திரேலியா இப்போது அமெரிக்கா, பிரிட்டனுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

முதுகில் குத்தியது
இதனால் பிரான்சின் தொழில்நுட்பத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவிற்கு கிடையாது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2016ல் செய்யப்பட்ட இரு நாட்டு ஒப்பந்தம் வேஸ்ட். இதைத்தான் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தங்கள் முதுகில் குத்திவிட்டதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜியான் லே டிரியான் தெரிவித்துள்ளார். எங்கள் முதுகில் குத்திவிட்டனர். ஆஸ்திரேலியாவை நாங்கள் நம்பி இருந்தோம். ஆனால் இப்போது எங்களை ஏமாற்றிவிட்டனர். நாங்கள் கோபமாக இருக்கிறோம். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜியான் லே டிரியான்தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு ஆதரவு
சீனாவை எதிர்க்க போகிறோம் என்று நினைத்துக்கொண்டு இப்போது பிரான்சுடன் அமெரிக்கா மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. கடத்த 300 வருடங்களுக்கும் மேலாக வரலாற்று ரீதியாக பிரான்ஸ் அமெரிக்கா உறவு மிகவும் சிறப்பாக இருந்தது. பல போர்களில், போராட்டங்களில், சர்வதேச பிரச்சனைகளில் இரண்டு நாடுகளும் ஒன்றாக இருந்திருக்கின்றன. ஈராக்கில் அமெரிக்கா படையெடுத்ததை தவிர மற்ற எந்த பிரச்சனையிலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே கிடையாது.

விமர்சனம்
ஈராக்கில் அமெரிக்க போர் தொடுத்த போது மட்டுமே பிரான்ஸ் அமெரிக்கா ஆகிய இரண்டு நாட்டு உறவு மோசமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஒப்பந்தம் காரணமாக இரண்டு நாட்டு உறவு முறிந்துள்ளது. இதை சீனாவும் கிண்டல் செய்ய தொடங்கி இருக்கிறது. நேரம் பார்த்து அமெரிக்காவை சீனா விமர்சனம் செய்து வருகிறது.அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை இது காட்டுகிறது. அவர்களின் தவறான முடிவுகளை இது காட்டுகிறது என்று சீனா விமர்சனம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications