முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? புதினுக்கு போன் போட்ட டிரம்ப்.. 2 மணிநேரம் கடந்தும் பேச்சுவார்த்தை
நியூயார்க்: உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் தொலைபேசியில் பேசினார். 2 மணிநேரம் கடந்தும் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் முடிவுக்கு வருகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்க அதிபராக இருந்த ஜோபைடன் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தார்.
தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். இவர் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளார்.

இதுதொடர்பாக ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் தொலைபேசியில் பேசியிருந்தார். அதேபோல் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து டொனால்ட் டிரம்ப் பேசியிருந்தார். ஜெலன்ஸ்கி - டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை மோதலில் முடிவடைந்தது. இதையடுத்து உக்ரைனுக்கான உதவியை டிரம்ப் நிறுத்திய நிலையில் அமெரிக்காவின் கீழ் பணியாற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார்.
மேலும் இந்த போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகளுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சவுதி அரேபியாவில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் 30 நாள் போர் நிறுத்தத்தை முதலில் ரஷ்யா அமல்படுத்த வேண்டும் என்று உக்ரைன் கூறியது. இதற்கு அமெரிக்காவும் ஒப்புக்கொண்டது. இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச உள்ளதாக டிரம்ப் கூறினார்.
மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்வார் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் தான் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இவர்கள் 2 பேரும் இரண்டு மணிநேரம் கடந்தும் பேசி முடித்தனர்.
இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. வெள்ளை மாளிகையின் அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளரான டான் ஸ்காவினோ தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இப்போது நடக்கிறது - அதிபர் டெனாால்ட் டிரம்ப் தற்போது ஓவல் அலுவலகத்தில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசி வருகிறார். அமெரிக்க நேரப்படி காலை 10 மணி முதல் பேசி வருகிறார். இருதரப்பு பேச்சுவார்த்தை நன்றாக நடக்கிறது. இன்னும் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது'' என்று கூறியிருந்தார். அதன்பிறகு பேச்சுவார்த்தை என்பது நிறைவு பெற்றது.
இந்த பேச்சுவார்த்தை இப்போது முடிவடைந்துள்ள நிலையில் ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன? என்பது விரைவில் தெரியும். அதோடு அமெரிக்கா, ரஷ்யா சார்பில் இந்த பேச்சுாவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விவரம் மற்றும் ரஷ்யாவின் டிமாண்ட் குறித்த அப்டேட்டுகள் நமக்கு கிடைக்கும். தற்போது வரை அதுபற்றிய தகவல்கள் எதுவும் வெளியாவில்லை.
இருப்பினும் டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவதில் உறுதியாக உள்ளார். இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் விரைவில் முடிவுக்கு வரலாம். டிரம்ப் கூறியதை புதின் கேட்கலாம் என்பதால் போர் நிறுத்தம் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications