காய்ச்சல் மருந்து கூட கிடைக்காது.. அழியப்போகும் அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டம்! டிரம்ப் செய்த தவறு
நியூயார்க்: அமெரிக்காவில், அக்டோபர் 1, 2025 முதல் இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளை நிறுவ வேண்டும்.
டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "அக்டோபர் 1, 2025 முதல், எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துப் பொருளுக்கும் 100% வரி விதிக்கப்படும். ஆனால், அந்த நிறுவனம் அமெரிக்காவில் தனது மருந்து உற்பத்தி ஆலையை அமைத்தால் வரி விலக்கு அளிக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டால், இந்த மருந்துப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது.

அழியப்போகும் அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டம்
இதனால் அமெரிக்காவில் ஹெல்த்கேர் சிஸ்டம்.. அதாவது சுகாதாரத்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மருந்துகள் வருடா வருடம் 300 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதோடு அங்கே பயன்படுத்தப்படும் 10 மருந்துகளில் ஒன்று இந்திய மருந்து ஆகும். தற்போது இதன் ஏற்றுமதி பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அங்கே மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. காய்ச்சல் மருந்துக்கு கூட மக்கள் அங்கே திண்டாடும் நிலை ஏற்படும்.
திண்டாட போகும் மக்கள்
உள்நாட்டுத் தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய நிறுவனங்களை வற்புறுத்துவதற்கு வரிகள் ஒரு முக்கிய கருவி என டிரம்ப் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார். டிரம்பின் இந்த 100% வரி விதிப்பு இந்தியாவின் மருந்துத் துறையை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கை ஒன்றின்படி, இந்த வரி விதிப்பு இந்திய மருந்து நிறுவனங்களின் வருவாயை கணிசமாகப் பாதிக்கலாம்.
இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் சுமார் 40% அமெரிக்க சந்தையை நோக்கியே உள்ளது. டிரம்ப் இந்திய மருந்து ஏற்றுமதிக்கு 50% வரி விதித்தால், 2026 நிதியாண்டில் மருந்து நிறுவனங்களின் வருவாய் 5 முதல் 10 சதவீதம் குறையலாம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
காரணம், பல பெரிய இந்திய மருந்து நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் 40 முதல் 50 சதவீதம் வரை அமெரிக்க சந்தையிலிருந்து பெறுகின்றன. 2025 நிதியாண்டில், இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் சுமார் 40% அமெரிக்காவிற்குச் சென்றது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்த மருந்து இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 6% ஆக இருந்தது.
மருந்து ஏற்றுமதிக்கு 50% வரி விதிக்கப்பட்டால், உலகின் மிகப்பெரிய மருந்து சந்தையில் இந்தியப் பொருட்களின் போட்டித்தன்மை குறைந்து, லாப வரம்புகளில் அழுத்தம் ஏற்படும். ஏனெனில், நிறுவனங்கள் அதிக செலவுகளை நுகர்வோர் மீது சுமத்த முடியாமல் போகலாம் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்தது. இதனால் மற்ற நாடுகள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி.. அமெரிக்காவின் சுகாதாரத்துறையும் கடுமையாக பாதிக்கப்படும்.
அதாவது அமெரிக்காவில் மருந்துகள் இல்லாமல் மக்கள் கஷ்டப்படும் அவலம் ஏற்படும். அமெரிக்கா 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 233 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் ஏற்கனவே சுகாதாரத்துறையில் பின் தங்கி உள்ள அமெரிக்கா மேலும் அதே துறையில் பின் தங்கும் அவலம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications