அமெரிக்காவில் இந்தியர்கள் ஹாப்பி! டிரம்ப்பின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்த நீதிமன்றம்!
நியூயார்க்: பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனால் ஏராளமான இந்திய கர்ப்பிணிகள் அவசர பிரசவத்தை நோக்கி தள்ளப்பட்டனர். இந்நிலையில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனறு மேரிலாந்து மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பது எளிதானது அல்ல. ஆனால் அவர்கள் அமெரிக்காவில் திருமணம் செய்துக்கொண்டு, அவர்களுக்கு அங்கேயே குழந்தை பிறந்தால்தான், அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். வேறு நாட்டை சேர்ந்த பெண் கருவுற்று இருக்கும்போது அமெரிக்காவுக்குள் நுழைகிறார் எனில், அமெரிக்க எல்லையில் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்படும். ஆக அமெரிக்காவில் பிறந்தால் குடியுரிமை வழங்கப்படும்.

இதனை birthright citizenship என்று கூறுவார்கள். அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தம் இந்த உரிமையை வழங்குகிறது. ஆனால் சமீப காலமாக இந்த குடியுரிமை நடைமுறைக்கு எதிர்ப்புகள் வலுக்க தொடங்கின.
நம்மூரில் வடமாநிலத்தவர்கள் வந்து வேலை செய்வதை சிலர் எதிர்க்கிறார்களே அப்படி, இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்கர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர். காரணம் அந்நாட்டின் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், திறமையாக இருக்கும் இந்தியர்கள் இதனை தட்டி பறித்துக்கொள்கிறார்கள் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனை கவனித்த டிரம்ப், நான் அதிபரானால் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை (birthright citizenship) வழங்கும் திட்டத்தை ரத்து செய்வேன் என்று கூறியிருந்தார். அதேபோல அவர் அதிபராக வந்த முதல் நாளே இதற்கான உத்தரவில் கையெழுத்து போட்டார். 'அமெரிக்க குடியுரிமையின் அர்த்தத்தையும், மதிப்பை பாதுகாத்தல்' (Protecting the Meaning and Value of American Citizenship) என அழைக்கப்பட்ட இந்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்து போட்டிருக்கிறார்.
இதன்படி பிப்.19ம் தேதிக்கு பிறகு மற்ற நாட்டை சேர்ந்தவர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை சட்டம் செல்லுபடியாகாது. H-1B அல்லது L விசாவை வைத்திருப்பவர்களுக்கு குழந்தை பிறந்தால் கூட அக்குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படாது.
குடியுரிமை வேண்டும் எனில், குழந்தையின் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்காவின் நிரந்தர குடிமகனாக இருக்க வேண்டும். அல்லது கிரீன் கார்டு வைத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவின் 10க்கும் அதிகமான மாகாணங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் மேரிலாந்து மாகாணமும் ஒன்று. இங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 5 கர்ப்பிணிகள் மற்றும் அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனம் ஒன்று என 6 பேர் சார்பில் டிரம்பின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜராகி வாதாடிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,
"அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 15வது திருத்தத்திற்கு எதிராக டிரம்ப்பின் நிர்வாக உத்தரவு இருக்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி டெபோரா போர்டுமேன், "குடியுரிமை என்பது மிகவும் மதிப்புமிக்க உரிமை" என்று கூறி டிரம்ப்பின் உத்தரவுக்கு நாடு தழுவிய தடை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளார்.
இதற்கு முன்னர் வாஷிங்டன் மாவட்ட நீதிபதி ஜான் கோஹெனூரும் இதேபோல டிரம்ப்பின் உத்தரவுக்கு அவசரகால தடையை பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவுகள் மூலம் அமெரிக்காவில் உள்ள மற்ற நாட்டினரை விட, இந்தியர்கள்தான் அதிகம் பயனடைவார்கள். ஏனெனில் அங்கு இந்தியர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications