அரிய வகை பறவை.. அழியவில்லை.. ஆஹா மீண்டும் கண்ணெதிரே தோன்றினாள்! ஆய்வாளர்கள் மகிழ்ச்சி
நியூயார்க்: அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவில் ஏறத்தாழ அழிந்துபோனதாக கருதப்பட்ட பறவையின் குஞ்சுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகை பறவைகள் 'ஹவாய் ஹனிக்ரீப்பர்ஸ்' எனப்படும் இனத்தை சேர்ந்தவையாகும். நியூயார்க்கிலிருந்து சுமார் 7,896 கி.மீ தொலைவில் உள்ள ஹவாய் தீவில் மட்டுமே வசிக்கும் ஒரு வகை சிறப்பு வாய்ந்த பறவை இனம்தான் இந்த ஹவாய் ஹனிக்ரீப்பர்ஸ்.
இந்த தீவு அமெரிக்காவுக்கு சொந்தமானதாக இருந்தாலும், இதனை முதன் முதலாக ஐரோப்பியர்கள்தான் கண்டுபிடித்தனர். அதன் பின்னர்தான் இது அமெரிக்காவுக்கு கைமாறியது.

அழிவு
இதனையடுத்து அமெரிக்கர்கள் பலர் இங்கு குடிபெயர தொடங்கினர். சாமானிய மக்கள் அல்லாது ஓரளவு வசதி படைத்தவர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இங்கு குடியேறினார்கள். விளைவு அங்குள்ள இந்த 'ஹவாய் ஹனிக்ரீப்பர்ஸ்' (ʻakekeʻe) எனப்படும் பறவையினம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கியது. மனிதர்கள் இங்கு குடியேறியவுடன் தங்களுக்கு தேவையானவற்றை இங்குள்ள காடுகளிலிருந்து பெற்றனர். குறிப்பாக ஓஹி'யா லெஹுவா எனப்படும் மரத்தை இவர்கள் அழிக்கத் தொடங்கினார்கள். இதில் கவலைக்குரிய அம்சம் என்னவெனில் அழிவின் விளிம்பில் உள்ள ʻakekeʻe எனப்படும் இந்த பறவைகள் இந்த மரத்தில் பூக்கும் பூக்களிலிருந்து கிடைக்கும் தேனைதான் அதிகம் நம்பி இருக்கின்றன. இதுதான் இப்பறவைகளின் பிரதான உணவு.

பறவையின் கூடு
ஆனால், மனிதர்கள் இந்த மரத்தை அழித்துவிட்டு அதற்கு பதிலாக banana pōka எனப்படும் ஒரு வகை வாழை மரங்களை அதிகம் பயிரிடத் தொடங்கிவிட்டனர். இம்மரத்தின் பூக்களிலிருந்து இப்பறவைகளுக்கு தேவையான அளவு தேன் கிடைக்காது. இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக இப்பறவைகள் அழியத் தொடங்கிவிட்டன. ஒரு காலத்தில் தீவின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை இருந்த இந்த பறவைகள் தற்போது இங்கு இருக்கும் தேசிய பூங்காவில் மட்டும் இருக்கிறது. அந்த அளவுக்கு சுருங்கிவிட்டது. இந்நிலையில் விஞ்ஞானிகள் தற்போது இந்த பறவைகளின் குஞ்சுகளை கண்டுபிடித்துள்ளனர். இப்பறவைகள் பொதுவாக மிக உயரமான இடங்களில்தான் கூடு கட்டும் இயல்பு கொண்டது. அதற்கேற்றார் போல ஹவாய் எரிமலையின் உச்சியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் இப்பறவை கூடு கட்டியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ʻakekeʻe பறவையின் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பூங்காவின் உயிரியலாளர்கள் கூறுகையில், "நாங்கள் கண்டுபிடித்துள்ள முதல் கூடு இதுதான். நாங்கள் இந்த தீவில் இப்பறவை இருப்பதை 1990 முதல் பார்த்து வருகிறோம். ஆனால் இவைகள் மிக அரிதாகதான் கண்களில்படும். அந்த வகையில், 2019ல் இப்பறவையை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பார்த்தோம். ஆனால் இதன் கூட்டை இப்போதுதான் பார்க்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.

அரிது அரிது
இந்த வகை பறவைகளில் பல இனம் உண்டு. ஒரு சில இனம் முட்டையிடுவதற்கும் ஓய்வெடுக்கவும் மட்டுமே தீவுகளுக்கு வரும். மற்றபடி பெரும்பாலான நேரத்தை இது கடலிலேயே செலவழிக்கும். மற்ற இனங்கள் காடுகளையும் பூக்களையும் நம்பியே காலத்தை தள்ளும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பறவையின் மற்ற இனங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. இதில் இன்னும் உயிருடன் இருப்பவையும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. எனவே மனிதர்கள் இதன் அழிவுக்கு காரணமாகவிடக்கூடாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications