பூமியை விட்டு நீண்ட தூரம் போகும் இரண்டாவது நிலவு! மீண்டும் வருமா? ஆய்வாளர்கள் விளக்கம்
நியூயார்க்: நமக்கு ஏற்கெனவே ஒரு நிலவு இருக்கிறது. சமீபத்தில் பூமியை நெருக்கமாக கடக்க முயன்ற விண்கல் சில நாட்களாக இரண்டாவது நிலவாக நம்மை சுற்றி வந்து கொண்டிருந்தது. தற்போது இது புறப்படும் நேரம் நெருங்கிவிட்டது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலவு மீண்டும் வருமா? என்கிற கேள்விக்கும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.
பூமிக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என ஒரேயொரு நிலவு மட்டும் இருக்கிறது. நிலவுகள் எல்லா கிரகங்களுக்கும் முக்கியமானவை. பூமிக்கும்தான். பூமியின் இயக்கத்தை கட்டுப்படுத்தவும், கடல் அலைகளை சீராக வைத்திருக்கவும் நிலவு மிகவும் உதவியாக இருக்கிறது. ஒருவேளை நிலவு இல்லாவிட்டால் பூமியின் சாய்வு கோணத்தில் மாற்றம் ஏற்படும். 23 டிகிரி பூமி சாய்ந்து இருப்பதால்தான் நாம் குளிர்காலம், வெயில் காலம், மழைக் காலம் போன்ற பருவ நிலைகளை அனுபவித்து வருகிறோம். இதற்கு நிலவுதான் காரணம்.

நிலவு இல்லை எனில், சாய்வு கோணத்தில் மாற்றம் ஏற்பட்டு, முன்கூட்டியே கணிக்க முடியாத அளவுக்கான பருவநிலை சீற்றங்கள் ஏற்படும். ஒரு பக்கம் வெள்ளமும், மறுபக்கம் கடும் வெயிலும் இருக்கும். இது உயிர்களின் சீரான வளர்ச்சியை பாதிக்கும். மனிதன் உயிர் பிழைத்திருப்பதையும் பாதிக்கும்.
நிலவு இருப்பதால்தான் நமக்கு ஒரு நாள் என்பது ஏறத்தாழ 24 மணி நேரமாக இருக்கிறது. ஒருவேளை நிலவு இல்லையெனில் ஒரு நாள் என்பது 50 மணி நேரமாக கூட இருக்கலாம். அப்படியெனில் ஓர் ஆண்டு என்பது எத்தனை மணி நேரமாக அதிகரிக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இப்படியாக நிலவு நமக்கு நிறைய உதவி செய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிலவுக்கு சப்போர்ட்டாக இன்னொரு நிலவு வந்து சேர்ந்தது. 2024 PT5 என பெயரிடப்பட்ட சிறு விண்கல்தான் இந்த இரண்டாவது நிலவு.
98 அடி விட்டம் கொண்ட இந்த விண்கல் அர்ஜுனா விண்கல் கூட்டத்திலிருந்து வந்திருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதியிலிருந்து இந்த விண்கல் பூமியை சுற்ற தொடங்கியது. மிகச்சரியாக சொல்வதெனில், இந்த விண்கல் பூமியை வேண்டும் என்றே சுற்றவில்லை. அதுபாட்டுக்கு நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருந்தது. இதன் பாதையில் பூமியின் சுற்றுவட்ட பாதை இருக்க.. அந்த நேரம் பார்த்து பூமியும் குறுக்கே வர, அதன் ஈர்ப்பு விசையால் விண்கல் பூமியை சுற்ற தொடங்கிவிட்டது.
ஆனால் ஈர்ப்பு விசை அவ்வளவு பலமானதாக இல்லை. எனவே, இக்கல் நவ.25ம் தேதி வாக்கில் பூமியின் சுற்றுவட்ட பாதையை விட்டு விலகி சென்றுவிடும். இப்படி செல்லும் இக்கல் மீண்டும் பூமிக்கு நிலவாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஆம், மீண்டும் 2055ம் ஆண்டு வாக்கில் மீண்டும் பூமிக்கு நெருக்கமாக இந்த விண்கல் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.
பொதுவாக விண்கல் என்றால் ஒரு அச்சம் இருக்கும். டைனோசர்களை அழித்ததை போல, நம்மையும் அழித்து விடுமோ என்று பயம் இருக்கும். ஆனால் இந்த 2024 PT5 எனும் விண்கல் எந்த பிரச்னையும் இல்லாமல் சமத்து பிள்ளையாக பூமியை கடந்து செல்ல இருக்கிறது. அந்த வகையில் இரண்டாவது நிலவுக்கு நாம் நன்றியுடன் குட்பை சொல்வோம்.












Click it and Unblock the Notifications