இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. ராசியான டிரம்ப்-புதின்! போர் நிறுத்தத்தால் இப்படி ஒரு நன்மையா!
நியூயார்க்: போர் நிறுத்தம் குறித்து, டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் புதிய முடிவை எடுத்திருக்கின்றனர். எனவே, விரைவில் உக்ரைன்-ரஷ்யா போர் முடிவடைய இருக்கிறது. அப்படி நடந்தால், இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை சட்டென குறையும்.
அதேபோல பெட்ரோல் டீசல் விலையும் குறைய வாய்ப்பு இருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். போர் நிறுத்தம் இந்தியாவுக்கு பெரிய அளவில் பலனளிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

நேற்றிரவு புதினுக்கு போன் போட்ட டிரம்ப், ஏஐ, மத்திய கிழக்கில் பதற்றம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தும் பேசியிருக்கிறார். எனவே விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவுக்கு என்ன லாபம்?
உலக அளவில் சூரியகாந்தி எண்ணெய் விநியோக சந்தையில் 70 சதவிகிதம், ரஷ்யா மற்றும் உக்ரைனை நம்பிதான் இருக்கிறது. போர் காரணமாக இந்த விநியோகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை மளமளவென அதிகரித்தது. இப்போது போர் முடியும் சூழல் இருப்பதால், எண்ணெய் விலை மீண்டும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைவை இல்லத்தரசிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
கடந்த 2024ம் ஆண்டு மட்டும் இந்தியா சுமார், 5,00,000 மெட்ரிக் டன் அளவுக்கு சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்திருந்தது.
பெட்ரோல் விலை குறையுமா?
சமையல் எண்ணெய் போலவே பெட்ரோல் விலையும் குறைய வாய்ப்பு இருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். இன்றைய தேதியில் இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் அளவில் சுமார் 85 சதவிகிதத்தை நாம் ரஷ்யாவிலிருந்துதான் இறக்குமதி செய்து வருகிறோம். இருப்பினும் நமக்கு தேவையான அளவுக்கு தொடர்ந்து எண்ணெய் கிடைக்கவில்லை. கொஞ்சம் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை அரபு நாடுகளிடம் சமாளித்துக்கொள்ளலாம் என இந்திய எண்ணெய் நிறுவனங்கள் யோசித்து வைத்திருந்தன.
ஆனால் போர் முடியும் என்பதால், ரஷ்யாவிடமிருந்தே மொத்த எண்ணெய்யையும் கொள்முதல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் விலையை குறைக்கலாம். இது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பை ஏற்படுத்தும்.
ஆனால், மத்திய மாநில அரசுகள் வரி மூலம் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. வரும் நாட்களில் ரஷ்யாவே குறைந்த விலையில் எண்ணெய் விற்றாலும் கூட, மத்திய மாநில அரசுகள் கூடுதல் வரியை போடாமல் இருந்தால்தான் அதன் பலன் நமக்கு கிடைக்கும். அதாவது பெட்ரோல் விலை குறையும். டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை காரணமாக பிரெண்ட் குரூட்(Brent crude) ஆயில் விலை 2.4 சதவிகிதம் குறைந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலையை அளவிட Brent crude பயன்படுத்தப்டுகிறது.
வேறு என்ன விலை குறையும்?
கோதுமையும் அதிக அளவில் உக்ரைன், ரஷ்யாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. எனவே சர்வதேச அளவில் கோதுமை விலையும் குறைய வாய்ப்பு இருக்கிறது. உரம், வேளாண் பொருட்களின் விலையும் குறையும் என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் உணவு மற்றும் எண்ணெய் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications