இரண்டு பேருமே நட்பு நாடுகள்தான்.. இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்.. டிரம்ப்
வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் மோதலை நிறுத்த வேண்டும் எனவும் இருநாடுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை தணிக்க, மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா நடத்திய தாக்குதலை போராகவே கருதுவோம் என்றும், இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியிருப்பதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா அவ்வப்போது தக்க பாடம் புகட்டி வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் திருந்தியபாடில்லை. இத்தகைய சூழலில்தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்
பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க உறுதிபூண்ட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்களை குறிவைத்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று அதிகாலை 1.44 மணிக்கு தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக அமைந்தது. இந்த சம்பவம் உலகம் முழுக்க கவனம் பெற்றது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்
இந்தியா நடத்திய தாக்குதலை போராகவே கருதுவோம் எனவும் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடாவடியாக பேசினார். இதனால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் நிலைமையை மேலும் பதற்றம் ஆக்காமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க உதவ தயார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகள் எனவும் என்னால் எதுவும் செய்ய முடியும் என்றால் நான் அதை செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் மோதலை நிறுத்த வேண்டும் எனவும் இருநாடுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை தணிக்க, மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார்.
போர் பதற்றம் அதிகரிப்பு
பாகிஸ்தான் எதிரபார்க்காத நேரத்தில் இந்தியா பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியை கொடுத்தது. அதுவும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே துல்லிய தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட 25 நிமிடத்தில் இந்த துல்லிய தாக்குதலை இந்தியா செய்து முடித்துவிட்டது. இதனால் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. வெறுமனே வாயால் மட்டுமே பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்து வருகிறது.
இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு நாங்களும் பதிலடி கொடுப்போம் என்று கூறி வரும் நிலையில், ஒருவேளை பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் அதற்கு உரிய பதிலடியை கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications