8 மணிநேரம் தான் ஆகிறது! இன்னும் நிறைய பார்க்க போகிறீர்கள்.. விடாத டிரம்ப்! மீண்டும் கடும் வார்னிங்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது மேலும் 25% கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, கூடுதலாக இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படலாம் என்று சூசகமாகத் தெரிவித்து உள்ளார்.

இந்தியா அமெரிக்கா வரி
ரஷ்ய எண்ணெயை வாங்கும் பிற நாடுகள் பல உள்ளன (உதாரணமாக சீனா), அந்த நாடுகள் மீது ஆக்சன் எடுக்காமல்.. இந்தியா மட்டுமே ஏன் தனியாக குறிவைக்கப்படுகிறது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, டிரம்ப், "நான் அறிவித்து 8 மணிநேரம் தான் ஆகிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்... இரண்டாம் நிலைத் தடைகள் அதிகம் வரப்போகின்றன" என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சீனா மீதும் இதே போன்ற கூடுதல் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க நிர்வாகம் யோசிப்பதாகவும் அவர் கோடிட்டுக் காட்டினார். இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட அபராதங்களைப் போலவே சீனா மீது கூடுதல் வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, "நடக்கலாம். நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தது. நடக்கலாம்" என்று பதிலளித்தார்.
நேற்று இரவு டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும்.
இந்தியா கண்டனம்
இந்த நடவடிக்கையை "அநியாயமானது, நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கருத்து தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் தேசிய நலன்களைப் பாதுகாக்க இந்தியா "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுக்கும் என்றும் அறிவித்தது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "அமெரிக்கா சமீப நாட்களில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியைக் குறிவைத்துள்ளது. எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம், எங்கள் இறக்குமதிகள் சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் 1.4 பில்லியன் இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"பல நாடுகள் தங்கள் தேசிய நலனுக்காகச் செய்யும் நடவடிக்கைகளுக்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்க முடிவு செய்தது மிகவும் தவறானது, துரதிர்ஷ்டவசமானது. இந்த நடவடிக்கைகள் அநியாயமானவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டெல்லி, ரஷ்ய எண்ணெய்க்கான இறக்குமதியை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க மாஸ்கோ சென்றுள்ளார். அமெரிக்கா-இந்தியா உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க அச்சுறுத்துகிறது. இந்தியா ரஷ்ய எண்ணெய் கொள்முதலை உடனே நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications