அமெரிக்கா ஒரு வீழும் நாடு! அழுது புலம்பிய டிரம்ப்.. சைலன்ட்டாக வென்ற பிடன்.. ரிசல்ட்டில் ட்விஸ்ட்
நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை இரண்டையும் கைப்பற்றுவோம் என்று நினைத்துக்கொண்டு இருந்த டிரம்ப்பின் குடியரசு கட்சி மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்து உள்ளது. எதிர்பார்த்ததை விட பிடனின் ஜனநாயக கட்சி தேர்தலில் முன்னிலை பெற்று உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இடைக்கால தேர்தலான மிட் டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. நாளையோடு மொத்த முடிவுகளும் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மொத்தம் இரண்டு அவைகள் உள்ளன. இதில்தான் பல்வேறு இடங்களுக்கு தற்போது தேர்தல் நடந்து உள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்கள் என்ற இரண்டு பலம் வாய்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்கள் 435 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள்.

அமெரிக்க தேர்தல்
இவர்களுக்குத்தான் இப்போது தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகி உள்ளன. அதேபோல் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மொத்தம் 100 பேர் இருக்கிறார்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இதில் பதவிக்காலம் முடிந்த 35 பேருக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த தேர்தலில் வெல்வதன் மூலம் இரண்டு அவைகளையும் கட்டுப்படுத்த முடியும். அதன்மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டங்களை கட்டுப்படுத்த முடியும், அதிபர் நினைத்த முடிவுகளை எளிதாக நிறைவேற்ற முடியும், யார் மீது வேண்டுமானாலும் விசாரணைக்கு உத்தரவிட முடியும்.

என்ன நடந்தது?
இதைத்தான் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி வெல்லும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. இரண்டு அவைகளையும் குடியரசு கட்சிதான் வெல்லும் என்று கணிப்புகள் தெரிவித்தன. அமெரிக்காவில் பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பு இழப்பு, துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனால் டிரம்பின் குடியரசு கட்சியை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக பொருளாதார சரிவு உச்சத்தில் இருக்கிறது. இதனால் எப்படியாவது குடியரசுத் கட்சிதான் வெல்லும் என்று கணிக்கப்பட்டது.

டிரம்ப் பிளான்
இதில் வெற்றிபெற்றால் அது டிரம்பிற்கு 3 விஷயங்களில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்
1. தனக்கு எதிரான விசாரணையை நிறுத்த முடியும்.
2. பிடன் கொண்டு வரும் சட்டங்களை தடுத்து அவரை செயல்பட விடாமல் செய்ய முடியும்.
3. அடுத்த அதிபர் தேர்தலில் இந்த வெற்றியை சுட்டிக்காட்டி மீண்டும் டிரம்ப் போட்டியிட முடியும்.

தோல்வி
ஆனால் பிடனின் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. அரிஸோனாவை வென்றதன் மூலம் அங்கு செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்து உள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின் படி, செனட் சபை - 34 இடங்களில் 35 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 19ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 14 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. தேர்தல் நடக்காத பழைய இடங்களையும் சேர்த்து டிரம்பின் குடியரசு கட்சிக்கு 49 செனட்டர்கள், ஜனநாயக கட்சிக்கு 50 பேர் உள்ளனர். பெரும்பான்மைக்கு 51 பேர் தேவை என்பது.

செனட் சபை
இதில் ஜார்ஜியாவில் ஒரு செனட் பதவிக்கு டிசம்பரில்தான் தேர்தல் நடக்கும். ஆனால் இப்போது 50 இடங்களை பெற்றதன் மூலம் ஜனநாயக கட்சி தானாக மெஜாரிட்டி பெறும். காரணம் துணை அதிபர் கமலா ஹாரிஸ்தான் டை பிரேக்கரில் கூடுதல் வாக்குகளை போடுவார். அப்படி இருக்கும் போது டிசம்பரில் ஜார்ஜியாவில் உள்ள ஒரு செனட் இடத்தை டிரம்பின் குடியரசு கட்சி வென்றாலும் கூட, கமலா ஹாரிஸ் உதவியுடன் செனட் சபையை ஜனநாயக கட்சி எளிதாக கட்டுப்படுத்தும்.

பிரதிநிதிகள் சபை
இன்னொரு பக்கம் பிரதிநிதிகள் சபை - 435 இடங்களில் 415 இடங்களுக்கு முடிவு வந்துள்ளது. அதில் 212 ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. குடியரசு கட்சி இதில் பெரும்பான்மை பெற வாய்ப்பு உள்ளது. 203 இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. இங்கு மெஜாரிட்டி பெற 218 இடங்களில் வெல்ல வேண்டும். இதில் குடியரசு கட்சி எளிதாக வெல்லும் ஜனநாயக கட்சி படுதோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனநாயக கட்சி 203 இடங்கள் வரை வென்றுள்ளது. இன்னும் 4-5 இடங்களில் அக்கட்சி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்த்தம் என்ன?
இதன் அர்த்தம் அங்கு பிடன் மீது மக்களுக்கு கோபம் இல்லை என்பதே. பிடன் அரசை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதாகும். டிரம்பிற்கு இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா ஒரு வீழும் நாடு என்று டிரம்ப் புலம்பும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. அவரின் கட்சியினரே அவரை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். டிரம்பை சரமாரியாக விமர்சனம் செய்து உள்ளனர். அவரால்தான் குடியரசு கட்சி தோல்வி அடைந்து, ஜனநாயக கட்சி வென்றது என்று விமர்சனம் வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications