விதி என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது.. அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய மோடி, "நீங்கள் ஏழு கடல்களுக்கு அப்பால் வந்திருக்கலாம், ஆனால் எந்தக் கடலும் உங்களை இந்தியாவிலிருந்து தூரமாக்கும் அளவுக்கு ஆழம் கொண்டிருக்கவில்லை." எனக் கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் பதவியேற்றது முதல் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். உலக நாடுகளின் தலைவர்களுடன் பழகி அந்த நாடுகளுடன் இந்தியா உடனான உறவை மேம்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது 3 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.

குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். சனிக்கிழமை காலை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்கா சென்றடைந்த அவருக்கு அங்குள்ள இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டெல்வர் மாகாணத்தின் வில்மிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வசித்து வரும் இல்லத்தில் அவரைச் சந்தித்தார்.
இன்று அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடன் கலந்துரையாடினார் பிரதமர் மோடி. இந்த நிகழ்வில் ஏராளமான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் அன்பு எனது அதிர்ஷ்டம்" என அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, "நான் எப்போதுமே புலம்பெயர்ந்த இந்தியர்களின் திறன்களைப் புரிந்துகொண்டிருக்கிறேன். நான் எந்த அதிகாரபூர்வ பதவியையும் வகிக்காத காலத்திலும் அதைப் புரிந்துகொண்டேன். என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் இந்தியாவின் வலுவான பிராண்ட் தூதர்களாக இருந்தீர்கள். அதனால்தான் நான் உங்களை 'ராஷ்டிரதூத்' என்று அழைக்கிறேன்.
இந்தியாவை - அமெரிக்கா உடனும், அமெரிக்காவை இந்தியா உடனும் இணைத்துள்ளீர்கள். உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு யாரும் போட்டியே இல்லை. நீங்கள் ஏழு கடல்களுக்கு அப்பால் வந்திருக்கலாம், ஆனால் எந்தக் கடலும் உங்களை இந்தியாவிலிருந்து தூரமாக்கும் அளவுக்கு ஆழம் கொண்டிருக்கவில்லை. மா பாரதி நமக்குக் கற்றுத் தந்ததை மறக்கவே முடியாது. எங்கு சென்றாலும் அனைவரையும் குடும்பமாக ஏற்றுக்கொள்கிறோம்.
பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வது, பன்முகத்தன்மையுடன் வாழ்வது என்பது நம் நரம்புகளிலே உள்ளது. டஜன் கணக்கான மொழிகள் மற்றும் வட்டார வழக்குகள், உலகின் அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மதங்கள் இருக்கும் நாட்டைச் சேர்ந்தவர்கள், இன்னும் நாம் ஒற்றுமையாக முன்னேறி வருகிறோம்.
உலகைப் பொறுத்தவரை, AI என்பது செயற்கை நுண்ணறிவைக் குறிக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, AI என்பது அமெரிக்க-இந்திய (American-Indian) உறவைக் குறிக்கிறது. இது உலகின் புதிய 'AI' சக்தி.... இங்குள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு எனது வணக்கம்.
உலகில் நான் எங்கு சென்றாலும் ஒவ்வொரு தலைவரும் புலம்பெயர்ந்த இந்தியர்களை புகழ்ந்து பேசுகிறார்கள். நேற்று, ஜனாதிபதி ஜோ பிடன் டெலவேரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். அவருடைய பாசம் எனக்கு இதயத்தைத் தொட்ட தருணம். அந்த பெருமை 140 கோடி இந்தியர்களுக்கும், இந்த பெருமை உங்களுக்கும், இங்கு வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் உரியது.
அமெரிக்க ஜனாதிபதி பிடனுக்கும் உங்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த 2024 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் முக்கியமானது. ஒரு பக்கம் சில நாடுகளுக்கிடையே மோதலும் போராட்டமும் நடக்க, மறுபக்கம் பல நாடுகளில் ஜனநாயகம் கொண்டாடப்படுகிறது. இந்த ஜனநாயகக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக உள்ளன.
இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் மனித வரலாற்றில் இதுவரை நடந்த மிகப்பெரிய தேர்தல். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வாக்காளர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்திய ஜனநாயகத்தின் இந்த அளவைப் பார்க்கும்போது நாம் இன்னும் பெருமையாக உணர்கிறோம்.
நீண்ட தேர்தல் பயணத்திற்குப் பிறகு, இந்த முறை இந்தியாவில் வரலாறு காணாத ஒன்று நடந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக, எங்கள் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இது போன்ற ஒரு விஷயம் நடக்கவில்லை. இந்த மூன்றாவது தவணையில் நாம் பெரிய இலக்குகளை அடைய வேண்டும்.
நான் எனக்கென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்திருந்த காலமும் இருந்தது, ஆனால் விதி என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தது. நான் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவில்லை. நான் குஜராத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தேன். பின்னர், மக்கள் என்னை பதவி உயர்த்தி பிரதமராக்கினர்.
சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் இந்தியப் பிரதமர் நான்தான். கோடிக்கணக்கான இந்தியர்கள் சுதந்திரப் போராட்டத்துக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். இந்தியாவுக்காக சாக முடியாது, ஆனால், நாட்டிற்காக வாழலாம். சுயராஜ்ஜியத்துக்காக என்னால் என் உயிரைக் கொடுக்க முடியவில்லை, ஆனால் சுராஜ் - நல்லாட்சி மற்றும் 'சம்ருத் பாரத்' (வளமான இந்தியா) ஆகியவற்றிற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.
"பாரத் ஆற்றல் மற்றும் கனவுகள் நிறைந்தது. ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் பார்க்கிறோம். இன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications