எமனாக மாறிய சத்து மாத்திரை.. உயிரிழந்த உதகை மாணவி..முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..ரூ.3 லட்சம் நிவாரணம்
நீலகிரியில் சத்து மாத்திரை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
நீலகிரி: உதகையில் அதிகளவில் சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில், ஒரு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஃபோலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை வீதம் 50 வழங்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் வழங்கப்படுகிறது.

பெட் கட்டிய மாணவிகள்
இந்த நிலையில் நகராட்சி உருது பள்ளியில் குழந்தைகளிடம் கடந்த வாரம் சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அப்போது 8ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒவ்வொரு மாணவியும் என்னால் தான் முடியும் என்று மாறி மாறி பேசியதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் யாரால் முடியும் என்பதை நிரூபித்து காட்டிவிடலாம் என்று கூறி, மாத்திரைகளை சாக்லேட் சாப்பிடுவது போல் தொடர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

4 மாணவிகள் மயக்கம்
ஒரு கட்டத்தில் மாத்திரை அதிகமாக சாப்பிட்ட மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் வகுப்பறையில் மயங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆசிரியர்கள் மயக்க நிலையில் இருந்த மாணவிகளை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை
முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் 4 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நான்கு பேரின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அதில் மூன்று மாணவிகளின் உடல்நிலை சீராகி வந்துள்ளது.

மாணவி மரணம்
உதகையில் தனியார் காட்டேஜில் ஊழியர் ஆக பணிபுரிந்து வந்த சலீம் என்பவரின் மகள் ஜெய்பா ஃபாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று மாலை மாணவியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சேலம் அருகே சென்றபோது மாணவிக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் குமாராப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மாணவி அழைத்து செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி ஜெய்பா ஃபாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேர் சஸ்பெண்ட்
உயிரிழந்த மாணவிக்கு கல்லீரலில் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த விசாரணையின் அடிப்படையில் முதல் கட்டமாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறை விசாரணை
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒருமுறை மதியம் சாப்பிட்ட பின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். அரசுப் பள்ளியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்
இதனிடையே நீலகிரியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் இறந்த மாணவி குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சத்து மாத்திரை சாப்பிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவிகளுக்கு தலா.1 லட்சம் நிவாரணம் அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications