9 விநாடிகளில் சுக்குநூறாகும் இரட்டைக் கோபுரங்கள்.. 3,500 கிலோ வெடி மருந்துகளை நிரப்பிய நிபுணர்கள்!
நொய்டா : நொய்டா சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இடிக்கப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பிரமாண்ட கோபுரங்கள் சில விநாடிகளில் தரைமட்டமாக்கப்பட உள்ளன.
ஒரு காலத்தில் பலரது கனவு இல்லமாக விளங்கிய இந்த இரட்டைக் கோபுரங்கள், தற்போது விதிமீறல் கட்டிடங்களாகியுள்ளன. இந்தக் கோபுரங்கள் 3,500 கிலோ வெடிமருந்துகள் கொண்டு இடிக்கப்படவுள்ளன.
இதற்காக 9,640 துளைகள் இடப்பட்டு 3,500 கிலோ வெடிமருந்துகள் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இன்று இந்த கட்டிடத்தில் உள்ள அறைகளுக்கிடையே இணைப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடம் இடிக்கப்படுவதால் ஏற்படும் நில அதிர்வு மற்றும் வெடிவிபத்தால் ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

நொய்டா இரட்டைக் கோபுரங்கள்
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், 'சூப்பர் டெக்' என்ற நிறுவனம் எமரால்டு கோர்ட் என்ற பிரமாண்ட இரட்டை கோபுரங்களைக் கட்டியது. இதில், 'அபெக்ஸ்' என்ற கட்டடம், 32 மாடிகளுடன் 328 அடி உயரமும், 'செயான்' என்ற கட்டடம் 31 மாடிகளுடன் 318 அடி உயரமும் கொண்டது. இந்த இரண்டு கோபுர வீடுகளும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடவில்லை என நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தரைமட்டம் ஆகும்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தக் கட்டடங்களை இடிக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது. தொடர்ந்து சூப்பர் டெக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், உச்ச நீதிமன்றமும் இடிக்க உத்தரவிட்டது. இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து தரைமட்டமாக்கும் பணி, எடிஃபைஸ் இன்ஜினியரிங் எனும் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் கட்டடங்களை இடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் திட்டமிட்டபடி இடிக்க முடியவில்லை. இதன் காரணமாக மூன்று மாதம் அவகாசம் கோரப்பட்டது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி
இதையடுத்து ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது. இந்தக் கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 7.5 லட்சம் சதுர அடி. ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் இந்த கட்டிடம் இடிக்கப்பட இருக்கிறது. ஒன்பது விநாடிகளில் தரைமட்டமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடிபாட்டால் ஏற்படும் தூசுகள் அடங்க 10 நிமிடங்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இடிப்பு நடவடிக்கைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

3500 கிலோ வெடிமருந்து
இந்த இரட்டை கோபுரங்களில் வெடிபொருட்கள் நிரப்பும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 90 பணியாளர்கள் இந்தியாவை சேர்ந்த 10 வெடிமருந்து நிபுணர்கள், வெளிநாடுகளை சேர்ந்த 7 நிபுணர்கள் இன்று பணிபுரிந்திருக்கின்றனர். இதற்காக 9,640 துளைகள் இடப்பட்டு 3500 கிலோ வெடிமருந்துகள் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இன்று இந்த கட்டிடத்தில் உள்ள அறைகளுக்கிடையே இணைப்பு வழங்கப்பட இருக்கிறது.

அப்புறப்படுத்தப்படுவார்கள்
காவல் துறையின் சார்பில் சுமார் 500 மீட்டருக்கு யாரும் உள் நுழையாதபடி ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இரட்டை கோபுரத்தை சுற்றியுள்ள 1,500 குடும்பத்தினர் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 7 மணிக்குள் அப்புறப்படுத்தப்படுவார்கள். நொய்டா - கிரேட்டர் நொய்டா விரைவு நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி வெடிக்க வைக்கப்படும்?
வெடிபொருட்கள் ட்ரில்லிங் மிஷின் மூலம் சுவர்கள், தூண்களில் துளையிடப்பட்டு உள்ளே வைக்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவின் ஜெட் டெமாலிஷனுடன் இணைந்து எடிஃபைஸ் இன்ஜினியரிங் கட்டிடத்தில் துளையிடும் பணியை மேற்கொண்டுள்ளது. 3,500 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெடிப்பினால் ஏற்படும் அதிர்வுகளைக் குறைக்க சுற்றிலும் அகழிகள் தோண்டப்பட்டு, சேறு குவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இடியும்
இம்ப்ளோஷன் எனப்படும் உள்நோக்கி இடிந்து விழும் முறையில் இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட உள்ளது. கீழே இருந்து கட்டிடம் இடியத் தொடங்கும். சில நிமிடங்களில் மொத்தமாக கட்டிடமே தரைமட்டமாகும். இடியும்போது ஏற்படும் தூசு, மாசுவைத் தவிர்க்க, அருகேயுள்ள கட்டிடங்கள் ஜியோடெக்ஸ்டைல் துணியால் மறைக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications