ஐடியில் பணியாற்றும் மனைவி மீது சந்தேகம்.. மகள் கண்முன்னே அடித்து கொன்ற கணவர்.. நொய்டாவில் கொடூரம்
நொய்டா: டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஐடி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றும் தனது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தனது மகளின் கண் முன்னேயே சுத்தியலால் கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி முதல் விண்வெளி வரை ஒவ்வொரு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு என்பது அளப்பரியதாக உள்ளது. என்னதான் இந்த சமூகம் பல துறைகளில் வளர்ந்துவிட்டது என்று பெருமிதமாக கூறினாலும், ஒருபக்கம் பெண்கள் மீதான பார்வை பெரிய அளவில் மாறிவிட்டது என்று கூற முடியாது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற பொது புத்தி இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றாலே பல விமர்சனங்களை ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு செல்லும் நிலைதான் உள்ளது.

இந்த நிலையில், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஐடி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றும் தனது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது கணவர் தனது மகளின் கண் முன்னரே சுத்தியலால் அடித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் ஐடி துறையின் மையமாக நொய்டா விளங்கி வருகிறது. அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக ஆஸ்மா கான் (42) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் நூர்உல்லா ஹைதர் (55). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பொறியியல் கல்வி பயின்று வருகிறார். மகள் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
அமைதியாகச் சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் சந்தேகம் எனும் புயலால் நிலை குலைந்து போயுள்ளது. சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் தனது மனைவியின் நடத்தையில் நூர் உல்லாவுக்கு பல நாள்களாக சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவ தினத்தன்றும் ஆஸ்மா கானுக்கும், நூர் உல்லாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இருவருக்கு வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நூர் உல்லா வீட்டிலிருந்த சுத்தியால் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன ஆஸ்மா கானை தொடர்ந்து சுத்தியலால் தாக்கி அடித்தே கொன்றுள்ளார் நூர் உல்லா.
எட்டாம் வகுப்பு படிக்கும் மகளின் கண்முன்னேயே தாயை தந்தை அடித்து கொன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நூர் உல்லா ஹைதரை கைது செய்தனர். கொலை சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
