“மெர்சல்” விஜய் ஸ்டைலில் எல்.முருகன்.. பிரான்சில் வேட்டி சட்டை! கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கல்
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் தொடங்கும் உலகின் மிகப்பெரிய திரைப்பட திருவிழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெட்டி சட்டையுடன் கலந்துகொண்டு இருக்கிறார்.
உலகின் பல்வேறு நாடுகளில் திரைப்பட திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் முதன்மையானதாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட திருவிழா. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட திருவிழா பிரான்ஸ் நாட்டின் ரிவியராவில் தொடங்கி உள்ளது.
மே 28 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திரைப்பட திருவிழாவில் பாலிவுட், ஆங்கில திரைப்படங்கள், பிரெஞ்சு, கொரியன் திரைப்படங்கள், தமிழ், மலையாளம், மராத்தி, இந்தி திரைப்படங்கள் என உலகின் பல மொழிகளில் வெளியான 600 க்கும் அதிகமான திரையிடப்பட்ட இருக்கிறது.

இந்த திரைப்பட விழாவில் இந்திய அரசு சார்பில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு பங்கேற்று உள்ளது. அதேபோல் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகைகள் நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே, வாணி திரிபாதி, நடிகர்கள் மாதவன், நவாசுத்தீன் சித்திக்கி உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
அதேபோல் கிராம்புர இசையமைப்பாளரும் பாடகருமான மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி சேஜ், தயாரிப்பாளர் சேகர் கபூர், சென்சார் போர்டு தலைவர் பிரசூன் ஜோஷி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்று உள்ளார்கள். இந்த விழாவில் இந்தியா சார்பில் மாதவன் நடித்த தி ராக்கெட்ரி திரைப்படம் திரையிடப்பட உள்ளது,
அதேபோல் 1978 ஆம் ஆண்டு நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற தம்பு என்ற மலையாள திரைப்படம், கோதாவரி, ஆல்பா பீட்டா காமா, துயின், பூம்பா ரெய்டு, ட்ரீ ஃபுல் ஆப் கிளிகள் போன்ற திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. தமிழில் வெளியான உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலும் இதில் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அவர் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்டதை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அவர் தனது பதிவில், "உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பில் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன். ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் #G20India சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் அவர் பிரான்ஸ் நாட்டுக்கு வேட்டி சட்டை அணிந்து செல்வார். அதேபோல் தற்போது எல் முருகனும் வேட்டி சட்டை அணிந்து பிரான்ஸுக்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications