லாலு பிரசாந்த்தின் மூத்த மகன் படுதோல்வி.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தேஜ் பிரதாப் யாதவ்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில் காலையிலேயே அதிர்ச்சி தரும் விதமாக மாஜி முதல்வர் லாலு பிரசாந்த் யாதவின் மூத்த மகனும் ஜனசக்தி ஜனதா தளத் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவைச் சந்தித்தார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேஜ் பிரதாப் யாதவ் 3வது இடத்தில் தான் நீடித்தார். இந்த தொகுதியில் இறுதியில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது.
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாகக் கடந்த வாரம் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கிட்டத்தட்ட எல்லா எக்ஸிட் போல்களிலும் பாஜக வெல்லவே வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தீவிரமாக நடைபெற்றது

பீகார் தேர்தல்
முதற்கட்ட முடிவுகள் வெளிானபோது கடும் போட்டி இருப்பது போலவே தெரிந்தது.. இருப்பினும் கொஞ்ச நேரத்திலேயே பாஜக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலைக்கு வந்தனர். எக்ஸிட் போல்களில் சொல்லப்பட்டதை விடவும் அதிக இடங்களில் பாஜக வெல்லும் சூழல் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 200+ தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெல்லும் சூழல் இருக்கிறது.
இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனேயே லாலு குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள மகுவா தொகுதியில் போட்டியிட்ட லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவைச் சந்தித்தார். தொடக்கத்திலேயே அவர் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல அவர் அதன் பிறகு கடைசி வரை மேலே வரவே இல்லை. ஒரு கட்டத்தில் 5வது இடத்திற்குக் கூட தள்ளப்பட்டு இருந்தார்.
3வது இடம்
இறுதியில் 27 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், மகுவா தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பில் சிராக் பாஸ்வான் கட்சி சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார் சிங், 87 ஆயிரம் வாக்குகளைப் பெற்று, சுமார் 44,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆர்ஜேடி கட்சியின் முகேஷ் குமார் 42,000 வாக்குகளை மட்டுமே பெற்றார். தேஜ் பிரதாப் யாதவ் 35 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.
தேஜ் பிரதாப் யாதவ், பீகார் அரசியலில் ஒரு முக்கிய நபராக அறியப்படுகிறார். இந்தத் தொகுதியின் முடிவுகள் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் தேஜ் பிரதாப் யாதவிற்கு மிகப் பெரும் பின்னடைவாகவே இருக்கிறது..
தேஜ் பிரதாப் யாதவ்
இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது தேஜ் பிரதாப் யாதவிற்கும் தேஜஸ்விக்கும் இடையே நீண்ட காலமாக அதிகாரப் போட்டி நிலவியது. கருத்து வேறுபாடுகளும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் தேஜ் பிரதாப் யாதவ் கட்சியில் இருந்து கூட நீக்கப்பட்டார். லாலு பிரசாந்த் வெளிப்படையாகவே இதை அறிவித்தார்.
எல்லாத் தொகுதிகளிலும் தோல்வி
இதையடுத்து தேஜ் பிரதாப் யாதவ் புதிதாக ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியைக் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்தார். இந்த முறை அவர் பீகாரில் 22 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. அதில் எல்லா தொகுதிகளிலுமே அக்கட்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சில தொகுதிகளில் பெற்ற வாக்குகள் ஆர்ஜேடி கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளையும் பறிப்பதாகவே இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications