புதுச்சேரியில் கடலில் குளித்த கல்லூரி மாணவி.. திடீரென வந்து இழுத்துச் சென்ற ராட்சத அலை
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் பகுதிக்கு சுற்றுலா வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் வந்த ராட்சத அலை ஒன்று மாணவியை இழுத்து சென்றது. நீண்ட நேரம் போராடியும் மாணவியின் உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. மீனவர்களின் உதவியுடன் மாணவி உடல் தேடப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 24 வயதாகும் சௌமியா ஹரியானா மாநிலத்தில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அங்கு திருச்சியை பூர்வீகமாக கொண்ட சித்தார்த் என்பவரும் படித்து வந்தார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததால் நண்பர்களானார்கள். சித்தார்த்தின் படிப்பிற்காக அவரது தாயார் ஜெயந்தியும் ஹரியானாவிலேயே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன் சித்தார்த் திடீரென உயிரை மாய்த்துக் கொண்டார். இதையடுத்து ஜெயந்தி சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்கு வந்தார். மகன் இறந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் பகுதிக்கு செல்வதற்காக கடந்த 22-ந் தேதி ஜெயந்தி புதுச்சேரி வந்துள்ளார். அவருடன் சௌமியாவும் வந்துள்ளார். இவர்கள் ஆரோவில் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளார்கள்.
பின்னர் நேற்று முன்தினம் தங்கி இருந்த அறையை காலி செய்து விட்டு ஜெயந்தி சென்னைக்கும், சௌமியா பெங்களூருக்கும் செல்ல பஸ்சில் முன்பதிவு செய்திருந்தார்கள். அதன்படி ஜெயந்தி சென்னை புறப்பட்ட நிலையில், அன்று இரவே சௌவுமியாவுக்கும் பஸ் இருந்தது. இதனால் அறையில் அவர் மட்டும் தனியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் பக்கத்து அறையில் தங்கியிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களான திருச்சியை சேர்ந்த டாக்டர் கணேஷ், மணீஷ் ஆகியோருடன் புதுச்சேரி பிள்ளைச்சாவடி கடற்கரைக்கு மாணவி சௌமியா சென்றுள்ளார். அங்கு அவர்கள் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்துள்ளனர்.
அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சௌமியா, சுரேஷ், மணீஷ் ஆகியோர் சிக்கி கொண்டனர். கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுரேஷ், மணீஷ் இருவரும் நீந்தி கரைக்கு வந்தனர். சௌமியாவை மட்டும் காணவில்லை. அவரை ராட்சத அலை உள்ளே இழுத்து சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அங்கிருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலில் இறங்கி தேடினர். ஆனால் சௌவுமியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்தது.
கல்லூரி மாணவி சௌமியாவை தேடும் பணியில் போலீசார், மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் மாணவிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள மாணவியின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துவிட்டனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications