அன்று விஜய்.. இன்று சிவகார்த்திகேயன்.. புதுச்சேரி முதல்வரின் அடுத்தடுத்த சந்திப்புகளுக்கு காரணம்?
புதுச்சேரி: உயர்த்தப்பட்டுள்ள படபிடிப்பிற்கான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் படபிடிப்பிற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு நாளைக்கு ரூ.5,000 நகராட்சி சார்பில் வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடங்கின. இந்தியாவிலும் பல மாதங்களாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக புதுச்சேரிக்கு படப்பிடிப்புகளின் வாயிலாக கிடைக்கும் வருவாய் குறைந்தது.

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பு வரி
இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டபோது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த ஒரு நாளைக்கு ரூ.25,000 வரி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்படவில்லை.

புதுச்சேரியில் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 20 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். பெயரிடப்படாத அந்த படத்தை SK 20 என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்துக்கான பல்வேறு காட்சிகள் புதுச்சேரியின் முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அங்கு படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் தங்கி இருக்கிறார்.

ரங்கசாமியை சந்தித்த சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்தார். அப்போது கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட படப்பிடிப்புக்கான வரியை குறைக்க வலியுறுத்தி அவர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தார். சிவகார்த்திகேயனின் கோரிக்கை கேட்ட முதலமைச்சர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து வரியை உடனடியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

விஜய்யுடன் ரங்கசாமி சந்திப்பு
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடிகர் விஜய்யை ரங்கசாமி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. விஜய் அரசியலுக்கு வருவதாக யூகங்கள் எழுந்து வந்த அந்த சூழலில் ரங்கசாமியுடனான சந்திப்பிற்கு என்ன காரணம் என்ற கேள்வியை பலர் எழுப்பினர். ஆனால், இது தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே என்றும் அரசியல் உள்நோக்கம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications