திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்கள்.. பெங்களூர் ஜனனி.. சிக்கியது எப்படி?
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீ்ஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. சனீஸ்வரருக்கு என்று பிரத்யேகமாக உள்ள கோயில்களில் இதுவே முதன்மையானது. இதற்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் குச்சனூரில் தான் கோயில் உள்ளது.
திருநள்ளாறு சனீ்ஸ்வரர் கோவில் பெயரை பயன்படுத்தி போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் பண மோசடி செய்ததாக அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூருவை சேர்ந்த ஜனனி பரத் என்ற பெண் உள்பட இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உலகில் உள்ள சனீஸ்வரர் பகவான் கோயில்களிலேயே, திருநள்ளாறு சனீ்ஸ்வரர் கோவில் தான் மிகவும் புகழ் பெற்றது.இங்கு பலரும் வருவார்கள். குறிப்பாக ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இதன் காரணமாக வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் சனீஸ்வரர் பகவான் கோவில் நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு முன் இணையதளத்தை உருவாக்கி முக்கிய பூஜைகள், தரிசனம் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. திருநள்ளாறு சனீ்ஸ்வரர் கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அபிஷேகம், அர்ச்சனை உள்ளிட்டவைகளுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.

அதேபோல் கோவிலுக்கு வர முடியாத பக்தர்களுக்கும் பூஜை செய்யப்பட்டு பிரசாதம் மட்டும் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அண்மைக்காலமாக பக்தர்கள் சிலர் கோவில் இணையதளத்தில் பணம் செலுத்தி விட்டதாகவும், பிரசாதம் வரவில்லை என்றும் கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்தார்கள். அதற்கான லிங்க் மற்றும் ரசீது ஆகியவற்றையும் அவர்கள் கோயில் நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதை பார்த்த கோவில் நிர்வாகம் போலி இணையதளம் என்பதை கண்டுபிடித்தது. இதையடுத்து காரைக்கால் சைபர் கிரைம் போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் நிர்வாக அலுவலர் அருணகிரிநாதன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆய்வு செய்தபோது கோவில் பெயரில் தொடங்கப்பட்ட போலி இணையதளத்தில் பணம் வசூலிப்பது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களை சேகரித்தனர்.
இதனிடையே திருநள்ளாறு சனீ்ஸ்வரர் கோவில் மேலாளர் சீனிவாசன், திருநள்ளாறு போலீசில் சமீபத்தில் புகார் செய்தார். அதில் 'கோவிலில் அர்ச்சகரான வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூருவை சேர்ந்த ஜனனி பரத் என்பவரும் சேர்ந்து கோவில் நிர்வாகம் பெயரில் போலியாக இணையதளத்தை உருவாக்கி உள்ளார்கள். அவர்கள் பக்தர்களிடம் பணத்தை பெற்று போலியாக பிரசாதம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனால் கோவில் நிர்வாகத்தை ஏமாற்றியும், கோவிலுக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்..
இதைத்தொடர்ந்து திருநள்ளாறு சனீ்ஸ்வரர் கோவில் அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்கள் மற்றும் பெங்களூருவை சேர்ந்த பெண்ணான ஜனனி பரத் ஆகிய 2 பேரையும் பிடித்து வந்து திருநள்ளாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்கள்.இறுதியில் தான் என்ன நடந்தது.. யாருக்கெல்லாம் தொடர்பு..எத்தனை பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications