புதுச்சேரி ரங்கசாமிக்கு பாஜக 'மெகா'வியூகம்.. சார்லஸ் மார்டின் வருகைக்கு பின்னால் நிழல் அரசியல்?
புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் ரங்கசாமி - பா.ஜனதா இடையேயான இந்த இழுபறிக்கு பின்னால் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் சான்டி என்கிற சார்லஸ் மார்டின் (லாட்டரி அதிபர் மார்டினின் மகன் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர்) மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் பின்னணி ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்ட சார்லஸ் மார்டின் புதுச்சேரி போன்ற சிறிய மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் களம் இறங்கும் போது, எளிய அரசியலை செய்யும் ரங்கசாமிக்கு பின்னாளில் சிக்கல் வரும் என்ற அச்சம் உள்ளது. அதுதான் ரங்கசாமியின் தயங்கத்திற்கு காரணமாக உள்ளது
புதுச்சேரியை பொறுத்தவரை ஆளுநர் என்.ஆர். காங்கிரஸ் ஏற்கனவே 16 தொகுதிகளிலும், பா.ஜனதா 14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பேசி முடித்துவிட்டார்கள். இப்படியான சூழலில், ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரான சார்லஸ் மார்டினின் புதிய கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது பாஜக. ஆனால் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று ரங்கசாமி மறுத்துவருகிறார்.

புதிய சக்தியை விரும்பவில்லை
இதுதான் புதுச்சேரி அரசியலில் உள்ள சிக்கல். ஏனெனில் பாஜக ரங்கசாமியின் பலமான தொகுதிகளில் வைக்கும் என்ற அச்சம் அவருக்கு உள்ளது. குறிப்பாக, ரங்கசாமியின் ஆதரவு அதிகமுள்ள புதுச்சேரியில் ஒரு புதிய சக்தி உருவாவதை ரங்கசாமி விரும்பவில்லை. இதனால் தான் அவர் பாஜகவின் பேச்சுவார்த்தைக்கு ரங்கசாமி வரமறுக்கிறார். பாஜக எப்படியாவது சமாதானம் செய்ய போராடி வருகிறது. ஆனால் ரங்கசாமி அவ்வளவு எளிதாக சார்லஸ் மார்டினின் கட்சியை ஏற்பாரா என்ற கேள்வி எழுகிறது..
'லாட்டரி' மற்றும் பிம்பம்
மார்டின் குடும்பத்தின் மீதான வருமான வரித்துறை சோதனைகள் மற்றும் 'லாட்டரி' தொடர்பான சர்ச்சைகள் இப்போதும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் இவர்களைக் கூட்டணியில் சேர்த்தால், எதிர்க்கட்சிகள் (காங்கிரஸ், திமுக) இதை ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டாக மாற்றும. ஒரு 'தூய்மையான மக்கள் முதல்வர்' என்ற தனது பிம்பம் பாதிக்கப்படும் என ரங்கசாமி கருதுகிறார்.
பாஜக பிடியில் இருந்து தப்பிக்க
புதுச்சேரியில் பாஜக எப்படியாவது காலூன்றத் துடிப்பது ரங்கசாமிக்கு நன்றாகவே தெரியும். பாஜக கொண்டு வரும் இந்தக் கூட்டணிக் கட்சிகள் உண்மையில் ரங்கசாமியின் செல்வாக்கைக் குறைத்து, பாஜகவின் பலத்தை மறைமுகமாக அதிகரிக்கவே செய்யும் என்று அவர் நினைக்கிறார். அதனால்தான் "மாநில அந்தஸ்து" என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பாஜகவை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்.
தனிப்பட்ட பிடிவாதம்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொதுவாக யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார். அதனால் தான் பேச்சுவார்த்தைக்கு வராமல் 'டிமிக்கி' கொடுத்துவிட்டு திருச்செந்தூர் சென்றுள்ளாக கூறப்படுகிறது. இது பாஜகவிற்கு அவர் விடுக்கும் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. "என் நிபந்தனைகளை ஏற்றால் கூட்டணி, இல்லையெனில் நான் தனித்தேப் போவேன்" என்பது போல் ரங்கசாமி சிக்னல் தருகிறார். எனினும் ரங்கசாமி பாஜககூட்டணியை விட்டு விலக மாட்டார் என்றே கூறப்படுகிறது. தற்போதைய பிரச்சனை என்பது சார்லஸ்மார்டின் கட்சி உள்ளே வருவது தான். அதுதான் ரங்கசாமியின் தூக்கத்தை காலி செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications