அடி தூள்! ஸ்டாலின் வழியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. இனி அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம்!
புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : புதுச்சேரி அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து இனி புதுச்சேரியிலும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணிக்கலாம்.
முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தைச் செயல்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசும் பேருந்தில் அனைத்து பெண்களும் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

கோரிக்கை
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி பட்டியலின பெண்கள் புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அனைத்துப் பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அனைத்து பெண்களுக்கும் இலவசம்
புதுச்சேரியில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி இன்று பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி அரசு ஏற்கனவே அரசு பேருந்துகளில் பட்டியலின பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. இதனை அனைத்து மகளிருக்கும் நீட்டிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் அனைத்து பெண்களும் இனி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

புதிய அறிவிப்புகள்
இந்த அறிவிப்புக்கு புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. மேலும், விதவைகள் உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட்
முன்னதாக புதுச்சேரியில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி கடந்த மார்ச் 13-ஆம் தேதி தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். மேலும் தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications