காதல் ஜோடிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ்.. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்
புதுச்சேரி: புதுச்சேரியில் விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடியிடம் அத்துமீறி நடந்துகொண்ட போலீசாரின் வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த புதன்கிழமை அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இரவு நேர ரோந்து சென்ற பெரியகடை காவல்நிலைய போலீசார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் அங்கிருந்த காதல் ஜோடிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பணம் பறித்ததாகவும் புகார் எழுந்தது. இச்சம்பவம் புதுச்சேரியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இதுகுறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடியே சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் போலீசார் இருவரும் காதல் ஜோடிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதனைதொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே போலீசார் பணம் பறித்து, அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் காதல் ஜோடிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆஜரானால் தங்கும் விடுதியில் நடைபெற்ற முழு சம்பவமும் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு காவலர்களையும் காப்பாற்றும் நோக்கில், பெரியகடை போலீசார் புகார் பதிவு குறிப்புகளை மாற்றி, மாற்றி எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமானவர்கள் யார்? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த வழக்கில் கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரும் தங்கும் விடுதியில் தங்கியிருந்ததாகவும், அந்த மாணவியிடம் போலீசார் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் இச்சம்பவத்தை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பிறகே இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது குறித்தான முழு விவரமும் தெரியவரும்.












Click it and Unblock the Notifications