காலேஜ் கட் அடிச்சா இனி இப்படித்தான்.. தேடி வந்து பிடித்த போலீஸ்.. அதிர்ந்த ஸ்டூடன்ட்ஸ்.. போச்சே!
புதுச்சேரி: வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பூங்காவில் சுற்றித்திரிந்த அரசு பள்ளி மாணவர்களை பிடித்து பள்ளியில் போலீசார் ஒப்படைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் பாரதி பூங்கா மிகவும் பிரபலமானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் சிலர் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு இந்த பகுதியில் சுற்றித் திரிவதாக புகார்கள் வந்தன.
இதனையடுத்து காவல்துறையினர் அதிரடியாக மாணவர்களை பிடித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஒப்படைத்துள்ளனர். ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மாணவர்களை பிடிக்க அதிரடி காட்டும் காவல்துறையினர் கொஞ்சம் அந்த வழக்குகள் தொடர்பாகவும் அதிர காட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புகார்கள்
புதுச்சேரியில் பாரதி பூங்கா பிரபலமானது. குழந்தைகள், சிறார்கள், வாலிபர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த பூங்காவுக்கு பொழுதுகளை கழிக்க வருவதுண்டு. அதேபோல பள்ளிகளில் பயிலும் தங்களது குழந்தைகளுக்கு உணவளிக்க அந்த பூங்காவுக்கு பெற்றோர்களும் வந்து செல்கின்றனர். ஆனால் சமீப நாட்களாக பூங்காவில் மாணவர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து சிலர் காவல்துறையினருக்கும் புகார் அளித்துள்ளனர்.

சுற்றிவளைப்பு
இந்த தொடர் புகார்களையடுத்து காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் திடீரென பூங்காவுக்கு விசிட் அடித்துள்ளனர். பின்னர் மாணவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் சுவரேறி குதித்து சென்றுவிட்டனர். ஆனாலும் மாணவர்கள் வருகை தொடர்ந்து குறைந்தபாடில்லை. எனவே காவல்துறை இம்முறை சீரியஸான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. யாரும் எதிர்பாராத நேரத்தில் பூங்காவுக்குள் புகுந்து மாணவர்களை சுற்றி வளைத்து பிடித்துள்ளது.

காவல்துறையின் அக்கறை?
இதனால் செய்வதறியாத மாணவர்கள் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர். இதனையடுத்து மாணவர்களின் பள்ளியை விசாரித்து அவர்களை பள்ளிகளில் கொண்டு சேர்த்துள்ளனர். காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களின் பாரட்டை பெற்றுள்ளது. ஆனால் அதே சமயம் நிலுவையில் உள்ள வழக்குளில் இந்த அதிரடியை காட்டியிருந்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் என்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

கல்வி என்பது
மாணவர்களின் உளவியலை பெற்றோர்களாகிய நாமும், பொது சமூகமும் புரிந்துகொள்வது அவசியம். அதாவது, இன்றைய கல்வி முறை குறித்தும், மாணவர்கள் கல்வி கற்றலில் உள்ள சிக்கல் குறித்தும், மாணவர்-ஆசிரியர் இடைவெளி குறித்தும் பேசாமல் 'கட்' அடிக்கும் மாணவர்களை கூண்டோடு பிடித்து கொண்டு மீண்டும் அதே பள்ளிக்கு விடுவதன் மூலம் அம்மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வம் அதிகரித்துவிடாது என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

மாற்றம் எங்கு ஏற்பட வேண்டும்?
கல்வி நிலையங்களில் என்ன சிக்கல்கள் இருக்கிறது? என்ன போதாமை இருக்கிறது? திரைப்படங்களிலும், இதர விஷயங்களில் இருக்கும் ஈர்ப்பு ஏன் பாட புத்தகங்களிலிருந்து கிடைப்பதில்? இவற்றையெல்லாம் விரிவாக நாம் அலசி ஆராய வேண்டிய காலகட்டங்களில் இருக்கிறோம் என்பதைதான் மாணவர்களின் இந்த செயல்பாடுகள் உணர்த்துகின்றன. எனவே இவையாவற்றையும் மாற்றாமல் மாணவர்களை மாற்ற நினைப்பது என்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்? என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications