"அங்கு என்ன தெரிகிறது?" தவெக தொண்டர்கள் முண்டியடித்த போது! எட்டி எட்டி பார்த்த புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரி: எல்லாரும் பாதுகாப்பாக உள்ளே வருகிறார்களா என்பதை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் சிரித்த முகத்துடன் அவர் ஆய்வையும் மேற்கொண்டார். போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொண்டர்களிடமே கேட்டுக் கொண்டார்.

73 நாட்களாக எந்த பொதுக் கூட்டத்தையும் விஜய் நடத்தவில்லை. காஞ்சிபுரத்தில் நடத்தியது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி. இது கூட உள்ளரங்கில் நடத்தப்பட்டது.
ஆனால் திறந்த வெளியில் அவர் நடத்துவது தற்போது புதுவையில்தான். ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்டு அது கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் 5000 பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கியூ ஆர் கோடுடன் கூடிய பாஸ்கள் கொடுக்கப்பட்டன. எனினும் பாஸ் இல்லாதவர்களையும் போலீஸார் அனுமதித்தனர்.
இந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அனுமதிக்கப்பட்ட போது எல்லோரும் பாதுகாப்பாக வருகிறார்களா என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.
மேலும் சிரித்த முகத்துடன் அவர் பார்த்துக் கொண்டிருந்த போது தொண்டர்கள் அவரை பார்த்து ஆரவாரம் செய்தனர். மேலும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்த போது போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு தவெக தலைவர் விஜய்யின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விஜய் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. விஜய், நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications