பேரு ராணி...ஊரு மணப்பாறை.. காவல்துறையை கன்ஃப்யூஸ் செய்த இளம்பெண்! தவிக்கும் பச்சிளம் குழந்தை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை விட்டு விட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரசவத்திற்காக அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அப்பெண் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியதால் மருத்துவமனை ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பெண் மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகியுள்ளார்.

ராணி
புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் இளம் பெண் ஒருவர் பிரசவத்திற்காக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ ஊழியர்கள் அவரிடம் முகவரி, கணவர் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டபோது அப்பெண் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது தனது பெயர் ராணி என்றும் தனக்கு சொந்த ஊர் மணப்பாறை என்றும், தனது கணவர் கடந்த மாதம்தான் துபாய் சென்றார் எனவும் அப்பெண் கூறியுள்ளார்.

மழுப்பல் பதில்
மேலும், தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் அவை தனது சகோதரியின் வீட்டில் உள்ளதாகவும் கூறியுள்ளார். சகோதரியின் பெயர் குறித்து கேள்வியெழுப்பிய போது அப்பெண் மழுப்பலாக பதிலளித்துள்ளார். மேலும், சொந்த ஊரில் உள்ள வீட்டின் முகவரி, அவரது சகோதரியின் வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற்று கொண்ட காவலர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கு வந்து பார்த்த மருத்துவமனை ஊழியர் குழந்தை மட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தப்பியோட்டம்
அப்பெண்ணை மருத்துவமனை முழுவதும் தேடியும் கிடைக்காததால் ஊழியர்கள் மீண்டும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மருத்துவமனையில் அப்பெண்ணை தேடி பார்த்தனர். ஆனால் அங்கும் இல்லாததால் அப்பெண் கொடுத்த முகவரியில் சென்று தேடி பார்த்துள்ளனர். ஆனால் அந்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்ணின் சகோதரியின் முகவரியிலும் சென்று தேடியுள்ளனர். ஆனால் அதுவும் போலியான முகவரி என தெரியவந்துள்ளது.

விசாரணை
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெற்ற குழந்தையை சில மணி நேரத்திலேயே விட்டு விட்டு தலைமறைவான தாயை தேடி வருகின்றனர். அதேபோல மணப்பாறை உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு இந்த வீடியோவை அனுப்பி வைத்து அப்பெண் குறித்த தகவல்கள் தெரிந்தால் தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications