’தாமரை’ வளர்ந்துருச்சா? அதெல்லாம் சும்மா.. சசிகலாவிற்கு தைரியம் இல்லை! போட்டுடைத்த கார்த்தி சிதம்பரம்!
புதுக்கோட்டை : தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது,பாஜக தமிழகத்தில் ஒருபோதும் வளராது அதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. என்னைப் பொருத்தவரையில் அதிமுக தலைமைக்கு வர வேண்டிய செயல்களில் ஈடுபட சசிகலாவிற்கு தைரியம் இல்லை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
கடந்த 15ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. ஒருபுறம் ஆலோசனைக் கூட்டம் மறுபுறம் போராட்டம் என தொடர்ந்து பரபரப்பு நிலவியது.
இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்..முதல்வர் ஸ்டாலின்

ரூபி மனோகரன்
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தில், திடீரென கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாகி அடிதடியாக மாறியது. மோதலுக்கு ரூபி மனோகரனே காரணம். அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலைலையில் ரூபி மனோகரனை கட்சியை விட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு நீக்கியது தவறானது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மறமடக்கியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனை கட்சியை விட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு நீக்கியது தவறானது, அந்த குழுவிற்கு அதற்கான அதிகாரமே இல்லை. இந்த விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளது.

பாஜக வளர்கிறதா?
திமுக காங்கிரஸ் கூட்டணி சுமூகமான உறவில் உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும். தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது,பாஜக தமிழகத்தில் ஒருபோதும் வளராது அதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. என்னைப் பொருத்தவரையில் அதிமுக தலைமைக்கு வர வேண்டிய செயல்களில் ஈடுபட சசிகலாவிற்கு தைரியம் இல்லை.

அதிமுக
அதிமுக முதலில் அவர்களின் உட்கட்சி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்,பின்பு மெகா கூட்டணி அமைப்பது பற்றி எடப்பாடி பழனிச்சாமி சிந்திக்கட்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி என்பது நியமன பதவி தான் ஒருவேளை அந்த பதவியை எனக்கு கொடுத்தால் அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்,இதை நான் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன்.

நீட் தேர்வு
நீட் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடு என்றும் ஒன்றுதான், நீட் தேர்வு மூலம் தற்போது அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார்கள், நீட் வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது, இதைச் சொல்வதால் நான் ஒன்றும் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல, முக.ஸ்டாலினை முதலமைச்சராக அரியணையில் அமர வைக்க வேண்டும் என்பதற்காக திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது அதில் நீட் விலக்கு வாக்குறுதி ஒன்று,அதனால் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்றார்.