பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.. காமராஜ் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு.. அமைச்சர் ரகுபதி சொன்ன பரபர காரணம்!
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் புதிய இரு சக்கர வாகனத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம் மற்றும் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை அமைச்சர் ரகுபதியிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பழிவாங்கும் நடவடிக்கை அல்ல
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது வீடுகளில் சோதனை செய்யும் போது பழிவாங்கும் நடவடிக்கை என்று தான் கூறுவார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. பழிவாங்கும் அரசாக திமுக அரசு செயல்படவில்லை. பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சிகள் ஆகியவை முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்து வருகின்றனர். அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆராய்ந்து, அதில் உண்மைதன்மை தெரிந்த பின்னரே சோதனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

விரைவில் குற்றப்பத்திரிகை
தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தப்பட்டு அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுக்கு பின் நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும். அதன் பின் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

திமுக அமைச்சர்கள்
இதேபோல், அதிமுக ஆட்சி காலத்தில் திமுக அமைச்சர்கள் தொடர்பான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடைபெற்றன. அவற்றை திமுக அமைச்சர்கள் சட்டரீதியாக எதிர்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைகிறது என்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

6 பேர் விடுதலை எப்போது?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேரின் விடுதலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு கிடையாது. எனவே அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சி
மேலும், தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து சேர நாடு, பாண்டியநாடு என பிரிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, அதிகார பலத்தை வைத்து அவர்கள் தமிழ்நாட்டை எத்தனை நாடாக வேண்டுமானாலும் பிரிக்கலாம். ஆனால் திராவிட மாடல் ஆட்சியை அசைக்க பார்க்க முடியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications