அண்ணாமலை சித்து விளையாட்டுக்கு பலிகடா தமிழிசை.. ரொம்ப பாவம்.. வருத்தமாக பேசிய கார்த்தி சிதம்பரம்!
புதுக்கோட்டை: தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றும், அண்ணாமலையின் சித்து விளையாட்டுக்கு அவர் பலிகடா ஆக்கப்பட்டார் என்றும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என பாஜக வைக்கும் அடிப்படை அற்ற குற்றச்சாட்டு. மோடி பிரசாரத்திற்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு எங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்று மேலோட்டமாக கூறினார். எந்த திட்டத்தில் ஒத்துழைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலுக்கு முன்பு ஒன்று கூறுகிறார். தேர்தலுக்கு பிறகு ஒன்று கூறுகிறார். அதனால் அவர் கூறுவது எனக்கு புரியவில்லை. மேலோட்டமாக தமிழ்நாடு அரசு எந்த வகையில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்பதை கூற வேண்டும். எந்த நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அதை செலவு செய்யவில்லை என்று ஆதாரப்பூர்வமாக அவர் சொன்னால் பதில் சொல்லலாம்.
ஜவுளி பூங்கா திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறினால் ஜவுளி பூங்காவிற்கு நிதி ஒதுக்கி உள்ளார்களா? நிதி ஒதுக்கி எந்த வகையில் முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதை தெளிவாக கூற வேண்டும். அவ்வாறு சொன்னார்கள் என்றால் தமிழ்நாடு அரசு அதற்கு பதில் சொல்லும்.
தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சௌகரியமாக தெலுங்கானாவில் ஆளுநராக இருந்தவர் அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கப்பட்டார். இன்று மீண்டும் ஆளுநர் அறிவிப்பின்போது தமிழிசை சௌந்தரராஜன் பெயர் இல்லாததைக் கண்டு வருத்தம் அடைகிறேன்.
யாரை அமைச்சராக்க வேண்டும். யாருக்கு பதவி உயர்வு தர வேண்டும். யாரை நீக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் முழு உரிமை. மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம். யாரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதேபோல் பிரதமருக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால், தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது மிகுந்த வருத்தம்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்துள்ள சூழலில் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். தெலுங்கானா - ஜிஷ்னு தேவ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications