வேங்கைவயல் மக்களை பார்க்கச் சென்ற விசிக நிர்வாகி கைது! திருமா ஸ்டாலினை சந்தித்த அதே நேரத்தில் பரபர!
புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராம மக்களைப் பார்க்கச் சென்ற விசிக துணை பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் அண்மையில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் மூன்று பேர் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டித்து, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், வேங்கைவயல் கிராம மக்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வேங்கைவையல் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார். அவர் உட்பட விசிகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசிக மாவட்ட அமைப்பாளர் நாகூர் முருகன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தமிழக காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். விசிகவினர் நடத்திய திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். வேங்கைவயல் வழக்கில் நீதி விசாரணை ஆணையம், பட்டியல் சமூக அதிகாரிகளுக்கு பதவி உயர்வு சட்டம், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக தொழில் முனைவோருக்கு வணிக வளாகங்கள் ஒதுக்குதல், ஜாதி வன் கொடுமைகளை தடுத்தல் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவையும் திருமாவளவன் அளித்தார்.
முதல்வர் உடனான சந்திப்பு தொடர்பாக திருமாவளவன், "வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களையே குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது அந்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. பெரும் அதிர்ச்சிக்குள்ளான அக்கிராமத்து மக்கள், குற்றப் பத்திரிக்கையைத் திரும்ப் பெற வேண்டும் எனவும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் வலியுறுத்தி தங்களின் குடியிருப்புப் பகுதியிலேயே அமைதியான முறையில் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, தற்போது சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்ற அறிக்கையை இறுதியாகக் கருதாமல், இது தொடர்பாக தீர விசாரித்து உண்மையைக் கண்டறிய ஏதுவாக, நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டுமாறு கோருகிறோம். அதாவது, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் "ஒரு நபர் விசாரணை ஆணையம்" ஒன்றை அமைக்குமாறு விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications