ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை திடீர்னு நிறுத்திய நபர்.. "எல்லாத்துக்கும் காரணம் அந்த நாய்"
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக வலிய வந்து பிரச்சாரம் செய்த நபர் திடீரென பேச்சை நிறுத்திவிட்டு சென்ற பரிதாபம் நடந்துள்ளது.
தமிழகத்தில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அது போல் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

அது போல் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ்ஸின் அதிமுக உரிமை மீட்பு கழகம், தமாகா, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. எனவே இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இணைந்த ஓபிஎஸ், ஆரம்பத்தில் 2 தொகுதிகளை கேட்டதாகவும் அதற்கு பாஜக தலைமை மறுத்ததாகவும் தெரிகிறது. அதாவது சின்னமே இல்லாமல் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்ஸுக்கு எப்படி இரு தொகுதிகளை ஒதுக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
அத்துடன் 2 தொகுதிகள் வேண்டும் என்றால் இரு தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் சுயேச்சையாகவும் ஒரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் நிற்கலாம். இதுவும் வேண்டாம் என்றால் ஒரே ஒரு தொகுதிதான் தர முடியும் என கூறிவிட்டனர்.
இதனால் வேறு வழியில்லாமல் அவர் சுயேச்சையாக ராமநாதபுரத்தில் களமிறங்கினார். தென் மண்டலத்தில் எப்படியும் நம் பெயர் மக்களுக்கு அத்துபடி என்பதாலும் அவர் சமூகத்து மக்கள் அங்கு நிறைய பேர் வசிக்கிறார்கள் என்பதாலும் வெற்றி நமக்குத்தான் என்ற குஷியுடன் அங்கு களமிறங்கினார்.
ஆனால் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளுக்கு முந்தைய நாள் ஓபிஎஸ் இல்லாமல் 4 ஓபிஎஸ்கள் சுயேச்சைகளாக களமிறங்கினர். இவர்களில் சிலர் ராமநாதபுரம், மதுரை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர். இதனால் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளில் இன்னும் எத்தனை பேர் களமிறங்க போகிறார்களோ என்ற எண்ணத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இருந்த நிலையில் அன்றைய தினம் மேலும் ஒருவர் எம்.பன்னீர் செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆக மொத்தம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் மேலும் 4 ஒபிஎஸ்களும் ஒரு எம்பிஎஸ்ஸும் களத்தில் உள்ளனர். இது எல்லாம் எடப்பாடி பழனிசாமி அணியினரின் வேலை என ஓபிஎஸ்ஸும் ஓ.பி.ரவீந்திரநாத்தும் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த கொடுமைகளை எல்லாம் தாண்டி ஓபிஎஸ் ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார். அவரை ஆதரித்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும் பிரச்சாரம் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு சோதனை மேல் சோதனையாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஓபிஎஸ்ஸுக்காக ஒருவர் வாண்ட்டடாக வந்து வண்டியில் ஏறினார். அதாங்க! பிரச்சாரம் செய்ய! ஒரு இடத்தில் பலாப்பழம் பதாகையுடன் அமர்ந்து மைக்கில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் சிந்தாமல் சிதறாமல் போட வேண்டும், வாக்களிக்க வேண்டும் பலாப்பழம் சின்னத்திற்கு! ஒரு மனிதன் பிறப்பதற்கு தாய் வேண்டும். நம் ஐயாவை நினைத்து பாருங்கள் , ஒரு தாயை இழந்து மனைவியை இழந்து காலம் முழுக்க எனக்கு இவர்தான் கடவுள் என சொன்ன புரட்சித் தாயையும் (ஜெயலலிதா) இழந்து ராமநாதபுரம் மாவட்டம்தான் எனக்கு சொந்தம் என சொல்லி நிற்கிறார்.
சிந்தித்து செயல்படுங்கள், உங்கள் பொன்னான வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என சொன்ன அந்த நபர் மீண்டும் தாயை இழந்து என ஆரம்பித்தார். அப்போது நாய் குரைத்ததால் எழுந்த அந்த நபர், வாழ்வில் பிறப்பது ஒரு முறைதான். எனவே சிந்தியுங்கள் என்றார். அப்போதும் விடாமல் நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. ஒரு பக்கம் வண்டி ஹார்ன் சப்தம், மறுபக்கம் கீரை கீரை... இன்னொரு பக்கம் நாய் ! இதனால் அந்த நபர் பேச்சை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினார்.












Click it and Unblock the Notifications