தண்ணீர் வரவில்லை என்றால் சாலையை மறிங்க! அது தான் சரியா வரும்! ரூட் போட்டுக் கொடுத்த நவாஸ் கனி எம்.பி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மக்களை சாலையில் இறங்கி மறியல் போராட்டம் நடத்துமாறு ஐடியா கொடுத்திருக்கிறார் நவாஸ் கனி எம்.பி.
நவாஸ் கனி எம்.பி.யை பொறுத்தவரை திமுகவின் மிக நெருங்கிய தோழமைக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர். கடந்த 4 ஆண்டுகளாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அவர், இப்போது தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அதிகாரிகள் தம் பேச்சை கேட்பதில்லை என்பதும் தாம் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பதும் தான் அவரது திடீர் சீற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் தான் அப்படி என்றால் திமுக ஆட்சியிலுமா அதே நிலை என நெருக்கமானவர்கள் மத்தியில் வருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ஊராட்சியில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து நவாஸ் கனி எம்.பி. அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் நொந்துப் போன அவர், தண்ணீர் வரவில்லை என்றால் ரோட்டை மறிங்க, அது தான் சரியாக வரும் என திருப்பாலைக்குடி மக்களுக்கு ஐடியா கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
திமுகவின் மிக நெருங்கிய தோழமைக் கட்சியாக கருதப்படும் முஸ்லீம் லீக் எம்.பி. அரசுக்கு எதிராக மக்களை சாலை மறியலில் ஈடுபடுமாறு ஐடியா கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பு கெட்டியாக பிடித்துக்கொண்டு கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி மீண்டும் சீட் வாங்கிவிடக் கூடாது என்பதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பினர் கவனமுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications