கிருஷ்ணசாமிக்கு எதிர்ப்பு.. இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கைக்கலப்பு.. இருபிரிவினர் இடையே மோதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபோது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்றார். அப்போது புதிய தமிழகம் கட்சியினருக்கும், இன்னொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பு உருவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு சென்று மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். அரசியல் கட்சியினர் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் அங்கு சென்று இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதனால் இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் இன்று கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் தான் இன்று மாலையில் புதிய தமிழகம் கட்சியினர் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு சென்றனர். அந்த கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்த சென்றனர். அப்போது கிருஷ்ணசாமி, தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அய்யர் உள்ளிட்டவர்கள் நினைவிட மண்டபத்தில் ஏறி நின்றனர்.
அப்போது திடீரென்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் புதிய தமிழகம் கட்சியினருக்கும், இமானுவேல் சேகரன் பண்பாட்டு குழுவினர் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்து புதிய தமிழகம் கட்சியின் பொதுச்செயலாளர் அய்யரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்த வேளையில் கிருஷ்ணசாமியும், அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியும் அமைதியாக நின்றனர். கைகளை நீட்டியபடி தகராறு வேண்டாம் என்று சிக்னல் காட்டினர். ஆனால் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து அங்கு இருந்த போலீசார் இருதரப்பையும் அங்கிருந்து அழைத்து சென்று பிரச்சனையை பேசி முடித்து வைத்தனர். இந்த சம்பவம் சிறிது நேரம் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக இன்று இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டது. அதோடு பாதுகாப்பு பணிக்காக 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அஞ்சலி செலுத்த வருவோர் கண்காணிக்கப்பட்டனர். மேலும் அஞ்சலி செலுத்த வருவோர் பைக்குகளில் வர தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications