திடீரென உள்வாங்கிய கடல்.. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் அலறிய மக்கள்! பரபர தகவல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திடீரென உள்வாங்கிய கடலால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.
இந்தியாவில் உள்ள முக்கியமான புனித தலங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்கின்றனர்.

மேலும் ராமேஸ்வரத்தில் 64 'தீர்த்தங்கள்' உள்ளன. இந்த தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையும் முக்கிய தீர்த்தமாக இருக்கிறது. இதனால் எப்போதும் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தான் இன்று காலையில் பக்தர்கள் கடலில் நீராடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அக்னி தீர்த்த கடற்கரையில் கடல் நீர் உள்வாங்கியது. சுமார் 50 அடி தூரம் கடல்நீர் உள்வாங்கி சென்றது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள் அனைத்தும் வெளியே சென்றன. மேலும் திடீரென கடல்நீர் உள்வாங்கியதால் அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓடினர்.
அதோடு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் பலரும் பயத்தில் கடலுக்குள் செல்வதை தவிர்த்தனர். இதுபற்றி மத்திய கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‛‛அக்னி தீர்த்த கடலில் இதுபோன்று கடல் நீர் உள்வாங்குவது ஒன்றும் புதிது அல்ல. இதற்கு முன்பும் கடல்நீர் உள்வாங்கி உள்ளது. அதன்பிறகு கடல் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். தற்போது காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருக்கலாம்'' என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications