அநியாயம் செய்யும் இலங்கை கடற்படை! காரைக்கால் மீனவர்களின் தவறு.. தண்டனை எங்களுக்கா? என்ன நடந்தது?
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து அனுமதிச்சிட்டை பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை மன்னார் வளைகுடா அருகே இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளது. மொத்தம் 7 பேரை கைது செய்த நிலையில் வரும் 13-ஆம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்று இருந்தனர். ஐஎன்டி டிஎன் 10 எம்எம் 984 என்ற எண் கொண்ட எடிசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், தனுஷ்கோடி தலைமன்னார் இடையே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து மன்னர் கடற்பகுதியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் காரல் மார்க்ஸ் பேசும் போது,"ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் கண்டனத்திற்குரியது. காரைக்கால் மீனவர்களின் தவறால் ராமேஸ்வரம் மீனவர்கள் தண்டனையை அனுபவிக்க முடியாது. தமிழக நாட்டு படகு மீனவர்களின் வலைகளை காரைக்கால் மீனவர்கள் சேதப்படுத்தி செல்கின்றனர்.
அதேபோல தமிழக மீனவர்கள் மட்டுமல்லாது இலங்கை பகுதிக்கு சென்று அப்பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுபோன்று தவறில் ஈடுபட்ட காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களை இரண்டு படகுகளை ராமேஸ்வரம் மீனவர்கள் ஆகிய நாங்கள் ஏற்கனவே சிறை பிடித்து வைத்திருந்தோம்.
தமிழக அரசு தலையிட்டு காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களின் விசைப்படகுகளை விடுதலை செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் தொடர்ந்து தமிழக மீனவர்களின் வலைகளையும் இலங்கை மீனவர்களின் வலைகளையும் அறுத்து செல்வதன் எதிரொலியாக தான் இன்றைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகிரங்கமாக இலங்கை மீனவர்கள் தெரிவிக்கும் தகவல் என்னவென்றால் அவர்களது படகுகளில் வெடி மருந்துகளை ஏற்றுக் கொண்டு இலங்கை கடற்பகுதிக்குள் வரும் படகுகளை எல்லாம் குண்டு அடித்து தகர்த்த போகிறோம். எங்களை எந்த அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை என இலங்கைப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய மாநில அரசுகள் தலையிட்டு ஒரு வாரம் தங்கு கடலில் தங்கி மீன் பிடிக்கும் காரைக்கால் பகுதி மீனவர்களை தடை செய்ய வேண்டும். அந்த ஒரு வார தங்கு கடலை ரத்து செய்ய வேண்டும். காரைக்கால் பகுதி மீனவர்கள் செய்யும் தவறுக்கு இராமேஸ்வரம் மீனவர்கள் தண்டனையை அனுபவிக்க கூடாது. அதனால் தேர்தல் வாக்குறுதி வழங்கியது போன்று மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்றார்.
புயல் காரணமாக தொடர்ந்து ஐந்து நாட்களாக ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்த வேளையில் இலங்கை கடற் பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்களின் வலைகளை தகர்த்தெறிந்தவர்கள் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். அவர்கள் செய்த விளைவின் காரணமாக இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை கண்டால் குண்டறிவோம் என தெரிவித்துள்ளது சங்கடத்திற்குரியது. பொதுவாக இலங்கை கடற் பகுதிக்குள் அத்துமீறி மீன் பிடிப்பது காரைக்கால் மீனவர்களே. அவர்களை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி எழு பேரையும் 13 ஆம் தேதி வரை வவுன்யா சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
