பரமக்குடியை பதற வைத்த பரமேசுவரன்.. கடைக்குள் துடித்த மனைவி.. கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று பட்டப்பகலில் திடீரென கடையில் இருந்த பெண்ணை நோக்கி ஆவேசமாக சென்ற நபர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லெனின் தெருவை சேர்ந்த 25 வயதாகும் மேகலா என்பவருக்கு பரமேசுவரன் என்பவருடன் கல்யாணம் நடந்தது. அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மேகலாவுக்கும் பரமேஸ்வரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.

மேகலா தனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். அப்போது, மேகலாவுக்கு 24 வயதாகும் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் காதலிக்க தொடங்கி நிலையில், ஒரு கட்டத்தில் மேகலா 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். தான் காதலித்த மணிகண்டனை திருமணமும் செய்து கொண்டார். இவர்கள் பரமக்குடி பாரதிநகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நன்றாக சென்ற உறவு திடீரென சிக்கலாகி உள்ளது.
கடந்த ஒரு மாதமாக இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனஸ்தாபம் உருவாகி உள்ளது. இதனால் மேகலா, மணிகண்டனுடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்து வந்தாராம். இதனால் தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து விடுவாரோ என்று பயந்த மணிகண்டன் மேகலா மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.
நேற்று மாலை 4 மணி அளவில், மேகலா தனது தாயார் வேலை பார்த்து வரும் பெரிய கடை பஜாரில் உள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக பணியாரம் சுட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த மணிகண்டன், தகராறு செய்ததுடன். உடலில் வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தியிருக்கிறார்.
இதில் மேகலா அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் அந்த கடையின் வாசலில் விழுந்தார். உடனே அங்கிருந்து மணிகண்டன் தப்பி ஓட முயன்றார். இதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே வேகமாக ஓடி வந்தனர். சிலர் துணிச்சலாக விரட்டிச் சென்று மணிகண்டனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர்.
இதற்கிடையே உயிருக்கு போராடிய மேகலா சற்று நேரத்தில் பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். டிஎஸ்பி சபரிநாதன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர். தொடர்ந்து போலீசார் மேகலா உடலை பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனை கைது செய்து பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications